
கடந்த மக்களவை தேர்தலில் மத்திய சென்னை தொகுதி எம்.பி.யாக திமுகவைச் சேர்ந்த தயாநிதி மாறன் வெற்றி பெற்றதை உறுதி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை மக்களவை தொகுதியில், திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், பாஜக வேட்பாளர் வினோஜ் பி. செல்வமும், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் பார்த்தசாரதி உள்ளிட்ட 31 பேர் போட்டியிட்டார்கள்.
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில், தபால் வாக்குகளில் எண்ணப்பட்டன. அதில், 1,562 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார் தயாநிதி மாறன். இதைத் தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வந்தார் தயாநிதிமாறன்.
வாக்கு எண்ணிக்கையில் இறுதியில் 4,13,848 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார் தயாநிதி மாறன். 2-வது இடத்தை பிடித்த பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வம், 1,69,159 வாக்குகள் பெற்றார். 31 வேட்பாளர்களில் ஒருவராக தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல். ரவி என்பவர் 696 வாக்குகள் பெற்றார்.
இதைத் தொடர்ந்து, தயாநிதி மாறனின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார் எம்.எல். ரவி. தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 17-ல் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 19 வாக்குப்பதிவு நாளன்று செய்தித்தாளில் விளம்பரம் வெளியிட்டு மக்கள் பிரநிதிநிதித்துவ சட்டத்தை தயாநிதிமாறன் மீறியதால் அவரது வெற்றியை செல்லாததாக அறிவிக்கக்கோரி மனுவில் குறிப்பிட்டிருந்தார் ரவி.
இதைத் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்தார் தயாநிதி மாறன், இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த தேர்தல் வழக்கை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து இன்று (மார்ச் 7) உத்தரவிட்டார். இதன் மூலம் தயாநிதிமாறன் வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது.