
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது பதியப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2022-ல் நடந்த அதிமுக பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட சி.வி. சண்முகம், தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பேசியதாகக் குறிப்பிட்டு திமுக பிரமுகர் ஒருவர் அளித்த புகாரின் பெயரில், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் சி.வி. சண்முகம் மீது திண்டிவனம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
காவல் நிலையத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் சி.வி. சண்முகம். சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையிலான தனி நீதிபதி அமர்வு, சி.வி. சண்முகம் அளித்த மனுவை ஏற்றுக்கொண்டு அதன் மீது விசாரணை மேற்கொண்டது.
உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது, `சி.வி. சண்முகம் பேச்சால் எந்த ஒரு சட்ட ஒழுங்கு பிரச்னையும் ஏற்படவில்லை. முதல்வருக்கு எதிராக அவதூறாகப் பேசியிருந்தால் தமிழக அரசு புகார் அளித்திருக்க வேண்டும், ஆனால் திமுக நிர்வாகி ஒருவர் புகார் அளித்திருக்கிறார். எனவே காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும்’ என்று வாதாடினார் சி.வி. சண்முகம் தரப்பு வழக்கறிஞர்
இந்நிலையில் சி.வி. சண்முகம் தொடர்ந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பில், திண்டிவனம் காவல் நிலையத்தில் சி.வி. சண்முகம் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.