
பாமக பொதுக்குழு தொடர்புடைய வழக்கில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் நீதிபதி அறையில் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாமகவில் நீண்ட நாள்களாகக் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. கட்சியிலிருந்து நிர்வாகிகளை நீக்குதல் மற்றும் கட்சியில் பொறுப்பாளர்களை நியமித்தலில் இருவருக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. ராமதாஸ் மிக நேரடியாக அன்புமணிக்கு மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக இருவரும் போட்டி பொதுக்குழுக் கூட்டங்களை அறிவித்துள்ளார்கள். விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 17 அன்று காலை 10 மணிக்குப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
சென்னை அருகே மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 9 அன்று காலை 11 மணியளவில் பாமக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பொதுச்செயலர் வடிவேல் ராவணன் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டார்கள்.
இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 9 அன்று நடைபெறும் பாமக பொதுக் குழுக் கூட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி ராமதாஸால் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட முரளி சங்கர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கட்சி விதிகளுக்கு முரணமாகப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுவதால், இதற்குத் தடை விதிக்க வேண்டும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்பு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, அன்புமணி மற்றும் ராமதாஸ் ஆகியோரை இன்று மாலை 5.30 மணிக்கு நீதிபதி அறையில் நேரில் வந்து சந்திக்குமாறு கேட்டுக்கொண்டார்.
நீதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க இருவரும் நேரில் ஆஜராவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Anbumani Ramadoss | Ramadoss | PMK | Madras High Court |