கோப்புப்படம்
கோப்புப்படம்

அமைச்சர்கள் சிவசங்கர், பெரியகருப்பன் மீதான வழக்குகள் ரத்து

தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்கள்.
Published on

தமிழக அமைச்சர்கள் பெரியகருப்பன் மற்றும் சிவசங்கர் மீதான வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த 2018-ல் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அமைச்சர் சிவசங்கர் மீது அரியலூர் காவல் துறையினர் இரு வழக்குகளைப் பதிவு செய்தார்கள். கடந்தாண்டு மக்களவைத் தேர்தலின்போது, அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பிரசாரம் மேற்கொண்டதாக தேர்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அரியலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த மூன்று வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி அமைச்சர் சிவசங்கர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதேபோல, கடந்த 2021-ல் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது விதிமுறைகளை மீறியதாக அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மீது சிவகங்கையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை ரத்து செய்யக்கோரி அமைச்சர் பெரியகருப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் இந்த மனுக்களை விசாரித்தார். அமைச்சர்கள் சிவசங்கர் மற்றும் பெரியகருப்பன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்து நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.

logo
Kizhakku News
kizhakkunews.in