இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தரத் தடை: சென்னை உயர் நீதிமன்றம்

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனுத் தாக்கல் செய்துள்ள ஓ. பன்னீர்செல்வம்.
ஓ. பன்னீர்செல்வம் (கோப்புப்படம்)
ஓ. பன்னீர்செல்வம் (கோப்புப்படம்)ANI

அதிமுக சின்னம், கொடி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த ஓ. பன்னீர்செல்வத்துக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகும், ஓ. பன்னீர்செல்வம் கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி வருவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், வழக்கு விசாரணை முழுமையாக முடியும் வரை சின்னம் உள்ளிட்டவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, சின்னம், கட்சி, கொடி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த ஓ. பன்னீர்செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ஏற்கெனவே நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

அதிமுகவின் கொடி, சின்னம், பெயர் உள்ளிட்டவற்றைக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் நிரந்தரமாகத் தடை விதித்தது. மேலும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்பதையும் எங்கும் பயன்படுத்தக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் வேட்புமனுவில் வேட்பாளரை அங்கீகரித்தும், சின்னத்தை அங்கீகரித்தும் கையெழுத்திட அதிகாரம் வழங்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளார். இல்லாதபட்சத்தில் இரட்டை இலை சின்னத்தை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் அவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in