பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வந்து நாடு முழுவதும் ஒரே விலையை நிர்ணயிக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் இன்று (செப்.11) உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் கொண்டு வந்தால் அவற்றின் விலை குறையும், எனவே பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வந்து நாடு முழுவதும் ஒரே விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கனகராஜ் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ண குமார் மற்றும் நீதிபதி பி.பி. பாலாஜி ஆகியோரைக் கொண்ட அமர்வுக்கு முன்பு இன்று வழக்கறிஞர் கனகராஜ் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்றது.
அதில், `தற்போது வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறைந்து, ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்குவது அதிகரித்துள்ளது. எனவே இதனால் ஏற்படும் பலன்களை மக்களுக்கு வழங்க பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவர வேண்டும்’ என்று வழக்கறிஞர் கனகராஜ் வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து மத்திய அரசு பதிலளிக்க தகுந்த கால அவகாசம் கோரினார் மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர். எனவே இது குறித்து மத்திய அரசு பதிலளிக்க 4 வாரங்கள் கால அவகாசம் அளித்து இந்த வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்கள் தற்போது ஜிஎஸ்டி வரி விதிப்பு வரம்புக்குள் இல்லை. பெட்ரோல், டீசல் மீது அந்தந்த மாநில அரசுகள் மதிப்புக் கூட்டு வரியை விதித்து வருகின்றன. இதனால் இந்த வரிகளுக்கு ஏற்ப பெட்ரோல், டீசலின் விலைகள் ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபடுகின்றன. மேலும் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டுவருவது குறித்து இதுவரை மத்திய, மாநில அரசுகளுக்குள் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.