
கடந்த அதிமுக ஆட்சியில் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது உரிமை மீறல் குழு அளித்த நோட்டீஸ் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 31) காலை தீர்ப்பளித்துள்ளது.
மேலும் இந்தத் தீர்ப்பின் வழியாக திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட உரிமை மீறல் குழுவின் நோட்டீஸ் குறித்து மீண்டும் விசாரணை நடத்த தமிழக சட்டப்பேரவை சபாநாயகருக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.
கடந்த 2011-ல் தமிழ்நாட்டில் குட்கா தயாரிக்கவும், விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் மாநிலத்தில் சட்டவிரோதமாகக் குட்கா புழங்குவதாகக் குற்றம் சாட்டியது திமுக. மேலும் இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான 18 திமுக எம்.எல்.ஏ.க்கள் தமிழ்நாடு சட்டப் பேரவைக்குள் குட்கா பொருட்களை எடுத்துச் சென்றனர்.
இதை அடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது சட்டப் பேரவையின் உரிமை மீறல் குழு நோட்டீஸ் அளித்தது. இந்த நோட்டீஸை எதிர்த்துச் சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வில் தடை வாங்கியது திமுக.
தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது அதிமுக. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், குமரப்பன் ஆகியோரைக் கொண்ட அமர்வு, உரிமை மீறல் குழு அளித்த நோட்டீஸை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
இந்த நோட்டீஸ் மீது சபாநாயகர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உரிமை மீறல் குழுவைக் கூட்டி நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட அப்போதைய எம்.எல்.ஏ.க்களிடம் விரைவாக உரிய விளக்கம் கேட்க வேண்டும் எனவும் தீப்பளித்துள்ளனர் நீதிபதிகள்.