கட்டாய கல்வி உரிமைச் சட்டம்: தமிழகத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

கடந்த 2021 முதல் தமிழகத்திற்கான நிதி மத்திய அரசால் வழங்கப்படாமல் இருக்கிறது.
கட்டாய கல்வி உரிமைச் சட்டம்: தமிழகத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
ANI
1 min read

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்படும் 25% இடங்களுக்கான நிதியை தமிழ்நாட்டிற்கு விடுவிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு நிலுவைத் தொகை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தின் தனியார் பள்ளிகளில் இத்திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை இன்னும் தொடங்கப்படாமல் உள்ளதாகத் தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கோவை மறுமலர்ச்சி இயக்கத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் அமர்வு விசாரித்து வந்தது.

முன்னதாக நடைபெற்ற விசாரணையில், தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் மத்திய அரசின் பங்கு 60 சதவீதம், மாநில அரசின் பங்கு 40 சதவீதம் என்றும், மத்திய அரசு கடந்த 2021 முதல் தமிழகத்திற்கு கல்வி நிதியை வழங்காமல் இருப்பதாகவும் தமிழக அரசு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த வழக்கில் வாதங்களும், பிரதிவாதங்களும் நிறைவடைந்த நிலையில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் உள்ள 25% இடங்களுக்கான நிதியை தமிழக அரசுக்கு விடுவிக்கக்கோரி மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற அமர்வு இன்று (ஜூன் 10) உத்தரவு பிறப்பித்தது.

மேலும், தேசிய கல்விக் கொள்கையின் கீழ் தமிழகத்திற்கு வழங்கப்படாமல் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட நிதியுடன், இதை தொடர்புபடுத்தக்கூடாது என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in