

பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் மேற்கொள்ளப்படும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பெரும்பாக்கத்தில் உலக சதுப்பு நிலக் குறியீடான ராம்சார் அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதி உள்ளது. இதில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அரசு அனுமதி வழங்கியதாகச் செய்திகள் வெளியாகின. இதற்குச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர். வெள்ளம் ஏற்படும்போது அதிகப்படியான நீரை உறிஞ்சி, வெள்ள பாதிப்பைத் தடுக்கும் சதுப்பு நிலப் பகுதி இதனால் பாதிக்கப்படும் என்பதால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ராம்சார் தல எல்லை வரையறைக்குள் வராத, தனியார் பட்டா நிலத்தில்தான் அனுமதி வழங்கப்பட்டது என்று தமிழ்நாடு அரசு கடந்த அக்டோபர் 28 அன்று விளக்கம் அளித்திருந்தது.
இதனையடுத்து, அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று (அக்.30) பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஏற்கெனவே குப்பைகள் கொட்டப்படுவதால் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட சதுப்பு நிலப் பகுதியில் அதிகார எல்லையை மீறி தமிழ்நாடு அரசு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி அளித்துள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும். மேலும் சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு எந்தக் கட்டுமானப் பணிகளுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் மேற்கொள்ளப்படும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதித்தது. மேலும், இதுகுறித்து நவம்பர் 12-க்குள் தமிழ்நாடு மற்றும் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
The Chennai High Court has ordered a ban on the construction works being carried out in the Pallikaranai marshland area.
