

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தொடர்புள்ள சர்ச்சைக்குரிய புத்தக விற்பனைக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை விமர்சிக்கும் வகையில் கீழைக்காற்று பதிப்பகத்தில் ‘திருப்பரங்குன்றம் விவகாரம் - ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிபதியா அல்லது ஆர்.எஸ்.எஸ். ரவுடியா’ என்ற தலைப்பிலான புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில் உள்ள அட்டைப்படத்தில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை விமர்சித்து கேலிச் சித்திரம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. மேலும் இப்புத்தகம் சென்னை புத்தகக் காட்சியில் விற்பனைக்கு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புத்தக விற்பனைக்கு எதிர்ப்பு
இதையடுத்து இந்தப் புத்தகம் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை விமர்சிக்கும் வகையில் இருப்பதாகவும், நீதித்துறை நேர்மையைக் கேலி செய்து அவமதிப்பதாகவும், நீதி நிர்வாகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைப்பதாகவும் குறிப்பிட்டு, இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்து, சென்னை காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக உள்துறை செயலருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சென்னை புத்தகக் காட்சியில் விற்பனையில்லை
இதற்கிடையில் சென்னை புத்தகக் காட்சியை நடத்தும் பபாசி அமைப்பு கேட்டுக்கொண்டதற்கு இணங்க சர்ச்சைக்குரிய அப்புத்தகத்தைப் புத்தகக் காட்சியில் விற்பனைக்கு வைப்பதைக் கைவிடுகிறோம் என்று கீழைக்காற்று பதிப்பகம் கடந்த ஜனவரி 5 அன்று அறிவித்தது. இது தொடர்பான அறிக்கையில், “பபாசி நிர்வாகமும் சூழலை புரிந்து கொண்டு ஒரு வெளியீட்டிற்காக ஒட்டுமொத்த புத்தகக் கண்காட்சியை சிக்கலுக்கு உள்ளாகி விடக்கூடாது. நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள் பங்குபெறும் இந்த புத்தக கண்காட்சி தடைபட்டால் அது அனைவருக்கும் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் என்ற நோக்கத்தில் எமது பதிப்பகத்திடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
புத்தகத்தைத் தடை செய்ய வழக்கு
இதற்கிடையில், நீதிபதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ள இந்த புத்தகத்தின் விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று நவீன் பிரசாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம். எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், புத்தகக் காட்சியை ஜனவரி 8 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதுபோன்ற செயல்களை முதலமைச்சரும் விரும்பமாட்டார். புத்தகக் காட்சி அரசால் நடத்தப்படவில்லை. பதிப்பாளர்களால் நடத்தப்படுகிறது. இந்தப் புத்தகம் புத்தகக் காட்சியில் விற்பனைக்கு வைக்கப்படாது என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
பதிப்பகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
அதன்பின் நீதிபதிகள் கூறியதாவது: “பொறுப்பில் இருக்கும் நீதிபதி மீது மிகவும் அவதூறான, களங்கம் ஏற்படுத்தும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து அளிக்கப்பட்ட புகார் மீது காவல்துறை விசாரணை நடத்தாது ஏன்? இந்தப் புத்தகத்தை விற்பனை செய்ய எப்படி அனுமதி வழங்கப்பட்டது? அறிவுசார் தளமான புத்தகக் காட்சியில் இதுபோன்ற புத்தகங்களுக்கு அனுமதி வழங்க முடியாது” என்று கூறினர். மேலும், புத்தகப் பதிப்பாளரான கீழைக்காற்று பதிப்பகம் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்த நீதிபதிகள், இது தொடர்பாக மூன்று வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று பதிப்பகத்திற்கு உத்தரவிட்டனர். புத்தகத்தைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதிகள், புத்தகம் விற்பனைக்கு வரவில்லை என்பதை உறுதி செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
The Madras High Court has ordered a ban on the sale of a controversial book related to Judge G.R. Swaminathan.