அரசியல் பிரசாரங்களுக்கு வழிகாட்டு விதிமுறைகள்: ஜன. 5-க்குள் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு | Madras HC |

மனுதாரர்களுக்கு ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடலாம்...
சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)
சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)ANI
1 min read

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணி உள்ளிட்டவை நடத்துவதற்கான வழிகாட்டு விதிமுறைகளை ஜனவரி 5-க்குள் வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூரில் கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அரசியல் கட்சி தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த அக்டோபர் 27 அன்று, அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு விதிமுறைகளை 10 நாள்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த நவம்பர் 6 அன்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளையும் கூட்டி தமிழ்நாடு அரசு ஆலோசனை மேற்கொண்டது. அதில், பொதுக்கூட்டங்கள் நடத்த அரசியல் கட்சிகளுக்கு வைப்புத் தொகை நிர்ணயிப்பது உள்ளிட்ட பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.

இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இதில் கடந்த நவம்பர் 21 அன்று, 25 பக்கங்கள் கொண்ட வழிகாட்டு விதிமுறைகளின் வரைவு அறிக்கையைத் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது. அதன் விசாரணையின்போது, மனுதாரர்களாக உள்ள அதிமுக, தவெக, தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கு மட்டும் அறிக்கையின் நகலை வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி வரைவு வழிகாட்டு விதிமுறைகளில் மனுதாரர்கள் குறிப்பிட்ட பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டு, இறுதி வழிகாட்டு விதிமுறைகள் உருவாக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இந்நிலையில், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு இன்று தீர்ப்பளித்துள்ளனர். அதில், வருகின்ற ஜனவரி 5-க்கு முன்னதாக இறுதி வழிகாட்டு விதிமுறைகளைத் தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு வெளியிடும் வழிகாட்டு விதிமுறைகளில் ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் மனுதாரர்களிடம் தெரிவித்து, வழக்கை முடித்துவைத்தனர்.

Summary

The Madras High Court has ordered the Tamil Nadu government to publish SOP for holding public meetings, rallies, etc. by political parties by January 5 2026

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in