தண்ணீர், உப்பு பாக்கெட்டுகளில் நுண் பிளாஸ்டிக் எச்சரிக்கை அவசியம்: சென்னை உயர் நீதிமன்றம் | Micro Plastic |

சிவப்பு வண்ணத்தில், பெரிய எழுத்துருவில் தெளிவாகத் தெரியும்படி இடம்பெற வேண்டும்....
சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புக்காட்சி)
சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புக்காட்சி)
2 min read

தண்ணீர், உப்பு மற்றும் சர்க்கரை பாக்கெட்டுகளில் நுண் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதற்கான எச்சரிக்கை வாசகம் அவசியம் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் மீது தமிழ்நாடு அரசு விதித்த தடை தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வனப்பகுதிகள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதிகள் என். சதீஷ் குமார் மற்றும் டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வனவிலங்குகளின் உடல்களில் நுண் பிளாஸ்டிக்

அப்போது, பிளாஸ்டிக் கழிவுகள் நீலகிரி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள வனவிலங்குகளீன் உடலுக்குள் சென்று அழிவை ஏற்படுத்துவதாக வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்தனர். மேலும், இது தொடர்பாக கோவை பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், பிளாஸ்டிக் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட வேதிப்பொருள் மனிதர்களின் ஹார்மோன் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நுண் பிளாஸ்டிக் துகள்கள் குறித்து ஆய்வு

தொடர்ந்து, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “பிளாஸ்டிக் துகள்கள் குறித்த ஆய்வுகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், மத்திய சுகாதார அமைச்சகம் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்டு வரும் ஆராய்ச்சிகளின் அறிக்கைப்படி, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளில் நுண் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, நாம் அன்றாடம் பயன்படுத்தும் உப்பிலும் சர்க்கரையிலும் கூட நுண் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த உப்பில் அதிக அளவிலான துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

எச்சரிக்கை வாசகம் அவசியம்

இதனையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: "பாதுகாப்பு என்பதுதான் மிக முக்கியமான காரணி. மக்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற்படும் சூழலில், நாம் பாதுகாப்பின் பக்கமே நிற்க வேண்டும். ஆய்வுகள் முடிந்து இறுதி அறிக்கை வரும் வரை காத்திருக்காமல், தற்போதே நுகர்வோருக்குத் தகவல் தெரிவிப்பது அதிகாரிகளின் கடமையாகும். எனவே, பெட் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட உப்பு, சர்க்கரை ஆகியவற்றின் பாக்கெட்டுகளில் நுண் பிளாஸ்டிக் துகள்கள் இருக்கக்கூடும் என்பதால், எச்சரிக்கை வாசகத்தை அச்சிட வேண்டும். இந்த எச்சரிக்கை வாசகம், சிவப்பு வண்ணத்தில், பெரிய எழுத்துருவில் தெளிவாகத் தெரியும்படி இடம்பெற வேண்டும். மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆகிய அமைப்புகள் இது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் உரிய அறிவிப்பாணையை வெளியிட வேண்டும். நிறுவனங்கள் இதனை முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

Summary

The Madras High Court has ordered that water, salt and sugar packets must carry a warning message about the presence of microplastic.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in