கடற்கரையை ஷாப்பிங் மால்களாக ஆக்கக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் | Marina |

கடைகள் அமைக்கப்படவுள்ள எண்ணிக்கையைக் குறைத்து புதிய திட்ட அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம்...
சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)
சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)
1 min read

மெரினா கடற்கரையில், உணவு பொருள்கள், பொம்மைகள், பேன்சி பொருட்கள் விற்கும் கடைகள் தவிர, வேறு எந்த கடைகளையும் அமைக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில், கடைகளை முறைப்படுத்துவது மற்றும் நீலக்கொடி சான்றிதழுக்காக கடற்கரையை அழகுப்படுத்துதல் தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் கடந்த டிசம்பர் 22 அன்று, கடற்கரையை நேரில் ஆய்வு செய்தனர். அப்போது கடைகள் அமைக்கப்படவுள்ள திட்டம் குறித்து மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் விளக்கினார்.

நீலக்கொடி பகுதிகளில் கடைகள் இல்லை

இதையடுத்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மெரினா கடற்கரையில் 1,417 கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நீலக்கொடி பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களில் எந்த கடைகளுக்கும் அனுமதி இல்லை" என்று தெரிவித்தார்.

நிரந்தரக் கடைகளை அகற்ற வேண்டும்

இதைக் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது: “உலகிலேயே இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினா கடற்கரையில் ஒரு பகுதி நீலக்கொடி சான்று பெற்ற பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக இரண்டு பகுதிகளை நீலக்கொடி சான்று பகுதியாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதவிர, தலைவர்களின் நினைவிடங்கள் அமைந்துள்ள பகுதியின் பின்புறமுள்ள இடத்தையும் நீலக்கொடி சான்று பெற்ற பகுதியாக அறிவிக்க நடவடிக்கை வேண்டும். மேலும், நீலக்கொடி சான்று பெற்ற பகுதிகளாக அறிவிக்கப்படும் இடங்களில் எந்தக் கடைகளையும் அமைக்க கூடாது. உழைப்பாளர் சிலையின் பின்புறம் அமைந்துள்ள நிரந்தர கடைகளை அகற்ற வேண்டும்.

கடற்கரைகள், ஷாப்பிங் மால்கள் அல்ல

உலகில் வேறு எந்த கடற்கரையிலும் இவ்வளவு கடைகள் இல்லை. சாலையில் இருந்து கடலின் அழகை ரசிக்க முடியாத அளவுக்கு கடைகள் மறைப்பதால், தற்போது 1,417 கடைகள் அமைப்பது என்ற திட்டத்தை மறு ஆய்வு செய்து, கடைகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க வேண்டும். உணவு பொருள்கள், பொம்மை, பேன்சி பொருட்கள் விற்கும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். மற்ற கடைகள் தேவையில்லை.

கடற்கரை என்பது மக்கள் ரசிக்கத் தானே தவிர, ஷாப்பிங் மால்களாக மாற்ற முடியாது. சுற்றுலா பயணிகள் கடற்கரையை ரசிக்க கடைகள் இடையூறாக இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் கடைகளின் எண்ணிக்கையை குறைத்து, புதிய திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்” என்று மாநகராட்சிக்கு அவகாசம் வழங்கிய நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 8 -க்கு தள்ளிவைத்தனர்.

Summary

The Madras High Court has ordered that no shops other than those selling food, toys, and fancy goods should be set up on Marina Beach.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in