திருநெல்வேலியில் நீதிமன்ற வளாகம் முன் நடைபெற்ற கொலை சம்பவம் தொடர்பாக தவறிழைத்த காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தம் ஊராட்சி கவுன்சிலர் ராஜாமணி என்பவர் கடந்தாண்டு கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக மாயாண்டி என்பவர் மீது கொலை வழக்கு உள்ளது. அதுமட்டுமின்றி கொலை முயற்சி வழக்குகளும் மாயாண்டி மீது நிலுவையில் உள்ளது.
கொலை முயற்சி வழக்கில் ஆஜராவதற்காக திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு மாயாண்டி வந்துள்ளார். அப்போது நீதிமன்ற வளாகம் முன்பு 7 பேர் கொண்ட கும்பல் மாயாண்டியை வெட்டிக் கொலை செய்தது.
நீதிமன்ற வளாகத்திலேயே கொலை நடந்தது அனைவருக்கும் அதிர்ச்சியைத் தந்தது. நீதிமன்றத்திலிருந்த காவலர்கள் கொலையைத் தடுக்காதது பெரும் விமர்சனத்துக்கும் கண்டனத்துக்குள்ளானது.
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் சட்டம்-ஒழுங்கு குறித்து விமர்சித்தார்கள்.
கொலைச் சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. கொலை தொடர்பாகவும் நீதிமன்றங்களில் அளிக்கப்படும் காவல் துறை பாதுகாப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கொலை தொடர்பாக காவல் துறையினர் எடுத்த நடவடிக்கைகள் குறித்து காணொளிகள் சமர்ப்பிக்கப்பட்டன. காவல் உதவி ஆய்வாளர் குற்றவாளி ஒருவரைப் பிடிக்க முனைப்பு காட்டியதற்குப் பாராட்டுகளைத் தெரிவித்த உயர் நீதிமன்றம், மற்ற காவலர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்றும் கேள்வியெழுப்பியுள்ளது. மேலும், காவலர்கள் செல்ஃபோனில் மூழ்கியிருப்பதாக விமர்சனம் வைக்கப்பட்டது.
கொலை சம்பவத்தின்போது, பணியில் தவறிழைத்த காவல் துறையினர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை காவல் ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஜனவரி 7-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.