

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி தீபத் தூணில் தீபமேற்ற முயன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுதல் தொடர்பான வழக்கில், சிஐஎஸ்எஃப் படையினர் பாதுகாப்புடன் மனுதாரர் தீபமேற்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் நேற்று (டிச. 3) உத்தரவிட்டிருந்தார். ஆனால், மனுதாரர் தரப்பைக் காவல்துறையினர் தடுத்ததால் திருப்பரங்குன்றத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, மதுரை மாவட்ட ஆட்சியர், அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கிடையில், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கேகே ராமகிருஷ்ணன் அமர்வு, மனுவைத் தள்ளுபடி செய்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஜி.ஆர் சுவாமிநாதனே விசாரிப்பார் என்று உத்தரவிட்டது.
அதனடிப்படையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, தனி நீதிபதி விசாரித்தார். அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் காணொளிக் காட்சி மூலம் ஆஜராகி பதிலளித்தனர். அதன்பின் தீர்ப்பளித்த நீதிபதி, “திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்து மக்கள் கட்சித் தலைவர் ராம ரவிக்குமார் தீபத் தூணில் இன்று இரவே தீபம் ஏற்ற வேண்டும். அவருக்கு காவல் ஆணையர் முழு பாதுகாப்பை வழங்க வேண்டும். உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை டிசம்பர் 5 காலை 10:30 மணிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றும் பணியில் இந்து அமைப்பினர் ஈடுபட்டனர். ஆனால், தமிழ்நாடு அரசு இந்த வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்யவுள்ளதாகக் கூறிய காவல்துறையினர், தனி நீதிபதியில் உத்தரவுக்கு எதிராக, மனுதாரர் உட்பட யாரையும் மலைக்கு மேல் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அங்கு வந்த பாஜகவினரும் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.
அப்போது, மனுதாரர் ராம ரவிக்குமார் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தீபமேற்ற முயன்றனர். இதையடுத்து நயினார் நாகேந்திரனைக் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் பலரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளார்கள்.
Police arrested BJP leader Nainar Nagendran for attempting to light the Karthigai lamp on the lamp pillar as per the order of the Madras High Court Madurai Bench in the Thiruparankundram.