
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்ட மனுக்களைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
கரூரில் கடந்த செப்டம்பர் 27 அன்று நடந்த தவெக தலைவர் விஜயின் பரப்புரையின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் குறித்து தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் பொதுச்செயலாளர் என். ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதியழகன் மற்றும் கரூர் மத்திய மாநகர தவெக நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். என். ஆனந்த் மற்றும் நிர்மல்குமாரைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக 9 பொதுநல வழக்குகள் இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தன. அதில், வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுக்கள், அரசியல் கட்சி கூட்டங்களுக்குப் புதிய விதிகள் வகுக்க வேண்டும் என்ற மனு, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட மனுக்கள் விசாரிக்கப்பட்டன.
இதில், சிபிஐ விசாரணைக்குக் கோரிய 4 மனுக்களின் மீதான விசாரணையின்போது, “சிபிஐக்கு வழக்கை மாற்றக் கோரும் மனுதாரர், சம்பவத்தால் பாதிக்கப்பட்டவரா? அப்படியெனில், அவர் இதை வழக்காக தாக்கல் செய்யும்பட்சத்தில் உத்தரவிடலாம். மற்றபடி விசாரணையில் திருப்தியில்லை என்றால்தான் விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற முடியும். ஆரம்ப நிலையிலேயே எப்படி விசாரணையை சிபிஐக்கு மாற்றும்படி கேட்க முடியும்? உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரின் நிலையை நினைத்துப் பாருங்கள்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், நீதிமன்றத்தை அரசியல் களம் ஆக்காதீர்கள் என்று கூறி, மனுக்களைத் தள்ளுபடி செய்தனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கான இழப்பீட்டு தொகையை ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற மனு குறித்து தவெக தலைவர் விஜய் மற்றும் அரசு தரப்பினர் இரு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
தொடர்ந்து, அரசியல் கட்சி கூட்டங்களுக்குப் புதிய விதிகள் வகுக்க வேண்டும் என்ற மனுவின் விசாரணையின்போது, எந்த அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் பொதுக்கூட்டங்களை தேசிய, மாநில நெடுஞ்சாலை அருகே நடத்தப்படக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஏற்கனவே அனுமதி பெற்ற கட்சி கூட்டங்களை நடத்த தடையில்லை என்றனர். மேலும், அனைத்து அரசியல் கட்சி, அமைப்புகளின் பொதுக்கூட்டங்களின் போது குடிநீர், மருத்துவம் ஆம்புன்ஸ் வசதியோடு, கழிப்பறை, வெளியே செல்லும் வழி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துத்தரப்படுவது உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் அமரவேல்பாண்டியன், “கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக, மதுரையை சேர்ந்த கதிரேசன் என்பவர் கடந்த செப்டம்பர் 30 அன்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்தார். அதன் விசாரணை இன்று நடந்தது. அதில், நிலையான செயல்பாட்டு நடைமுறைகள், பாதுகாப்பு விதிமுறைகள் இல்லாமல் அனுமதி கொடுக்கப்பட்டதால்தான் இதுபோன்ற துர்சம்பவம் நடக்கிறது. அதனால் உயர்மட்டக் குழு ஒன்று உருவாக்கப்பட்டு, உரிய நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் வகுக்கப்படும் வரை தவெக உட்பட எந்த அரசியல் கட்சிகளுக்கும் மக்கள் பயன்படுத்தும் சாலைகளில் அனுமதி வழங்கப்படக் கூடாது என்று கோரிக்கை வைத்தோம்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதன்படி தமிழ்நாடு அரசு வழிகாட்டு நடைமுறைகளை வழங்கும் வரை எந்த அரசியல் கட்சியும் இதுபோன்ற சாலை வலம் நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே தேசிய பேரிடர் மேலாண்மை இயக்கம் உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகள் கூட்டங்கள் நடத்தப்படும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை வழங்கியுள்ளார்கள். அதைப் பின்பற்றி இருந்தாலே இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது.
கடந்த ஜூன் மாதம் பெங்களூரில் ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இதனால் இரண்டே மாதங்களில், கூட்ட நெரிசலில் மேற்கொள்ள வேண்டிய ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து கர்நாடக மாநில அரசு நாட்டிலேயே முதன்முறையாக மசோதா ஒன்றை தாக்கல் செய்து, அதனை சட்டமாக்கியுள்ளது. அதே போன்று தமிழக அரசும் புதிதாக சட்டத்தை இயற்ற நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம்.
அதனையும் நீதிபதிகள் கருத்தில் கொண்டுள்ளனர். அதேபோல் கூட்டங்களை ஒருங்கிணைப்பவர்களுக்குக் கூடுதல் பொறுப்பை வழங்கும் வகையில் குழு காப்பீடு, பாதுகாப்பு முன்பணம் ஆகியவை இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிடவும் கோரிக்கை விடுத்தோம். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். மேலும், தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ரோடு ஷோ நடத்தக் கூடாது என்ற இடைக்கால உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கொடுத்துள்ளது” என்று கூறினார்.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகளின் விசாரணை நடந்த அதே சமயத்தில் சென்னை உயர் நீதிமன்றத்திலும் கரூர் சம்பவம் தொடர்பான பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அப்போது, நாமக்கல்லில் ஏற்பட்ட விஜயின் பிரசாரத்தின்போது தனியார் மருத்துவமனை தாக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், தவெக நாமக்கல் மாவட்ட செயலாலர் சதீஷ்குமாரின் முன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தனர். விசாரணையின்போது, தவெகவினரின் அடாவடி செயல்களால் நாமக்கல்லில் ரூ. 5 லட்சம் வரை சேதம் ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், “கட்சியினர் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிலையில், எதுவும் தெரியாது என்று மனுதாரர் எப்படிக் கூறலாம்?” என்று கேட்டு, முன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.