திருப்பரங்குன்றத்தில் உள்ளது தீப்பத்தூண் அல்ல, சர்வே கல்: அரசு தரப்பில் வாதம் | Thiruparankundram |

தேவையில்லாமல் மாற்றிடத்தில் தீபம் ஏற்றக்கூடாது என்று ஏற்கனவே உத்தரவு உள்ளது...
உயர் நீதிமன்ற மதுரை கிளை (கோப்புப்படம்)
உயர் நீதிமன்ற மதுரை கிளை (கோப்புப்படம்)ANI
2 min read

திருப்பரங்குன்றம் மலையின் மேல் உள்ளது தீபத்தூண் அல்ல, சர்வே கல் தான் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வாதிடப்பட்டது.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த டிசம்பர் 1 அன்று பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர் சார்பிலும், மதுரை மாவட்ட கலெக்டர் சார்பிலும் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில் இந்து அமைப்புகளை சேர்ந்த ராம ரவிக்குமார், சோலைக்கண்ணன் சார்பில் வக்கீல்கள் அருண்சுவாமிநாதன், நிரஞ்சன் எஸ்.குமார் ஆகியோர் கேவியட் மனு தாக்கல் செய்தனர். மேலும் சில மனுக்களும் இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,

“மலை உச்சியில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம்தான் அனுமதி வழங்க வேண்டும். தீபம் ஏற்ற உத்தரவிட்ட இடத்துக்கு அருகே தர்கா உள்ளது. வழக்கமாக தீபம் ஏற்றப்படும் நடைமுறையே இந்த ஆண்டும் பின்பற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபத் தூண் அல்ல; அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. 73 ஆண்டுகளாக உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்திலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அதில் எந்த பிரச்னையும் இல்லை. 1994-ல் இருந்துதான் பிரச்னை ஏற்பட்டது, தீபம் ஏற்றுவது குறித்து பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 2014-ல் விரிவான தீர்ப்புகள் வந்துள்ளன” என்று வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கீட்ட நீதிபதிகள் “திருப்பரங்குன்றம் தூண் சர்வே கல் தான் என்று உறுதி செய்துள்ளீர்களா?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், “மலை உச்சியில் உள்ளது சர்வே கல் தான். மலையில், நெல்லித்தோப்பு, தர்கா உள்ளிட்டவை தர்காவிற்குச் சொந்தமானது; மற்றவை கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமானது. பொது அமைதியை நிலைநாட்டுவதே அரசின் முக்கியப் பணி. தீபம் எங்கே ஏற்ற வேண்டும் என்பதை கோவில் நிர்வாகம்தான் முடிவு செய்ய முடியும். தர்கா அருகில் உள்ள தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என்ற மனு ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் அமர்வில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆகம விதிகளுக்கு எதிராக கோவில் நிர்வாகம் செயல்பட முடியாது. தர்கா அருகே கார்த்திகை தீபம் ஏற்றக் கூறுவது தேவையில்லாத பிரச்னையை உருவாக்கும். தேவையில்லாமல் மாற்றிடத்தில் தீபம் ஏற்றக்கூடாது என்று ஏற்கனவே உத்தரவு உள்ளது. எனவே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதிடப்பட்டது.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை வழக்கை வரும் டிசம்பர் 15 அன்று ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Summary

The Tamil Nadu government argued in the Madurai branch of the High Court that the Thiruparankundram Deepathoon is a survey stone. The judges ordered that the Thiruparankundram case be adjourned to December 15.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in