கடந்த 2016-ல் டி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப் 1 தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பான விசாரணையை விரைந்து முடிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற அமர்வு இன்று (ஆகஸ்ட் 30) உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணயமான டி.என்.பி.எஸ்.சி.யால் சர் ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்குக் கடந்த 2016-ல் குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் விடைத்தாள்களை மாற்றி வைத்து முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.
அதைத் தொடர்ந்து முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த டி.என்.பி.எஸ்.சி ஊழியர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இதன் பிறகு குருப் 1 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு சென்னை ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில் குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கருணாநிதி என்பவர் வழக்குத் தொடுத்தார். கருணாநிதி தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
இந்த விசாரணையில் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரதாப், குருப் 1 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் 65 சாட்சிகள் சேர்க்கப்பட்டு அவர்களிடம் வாக்குமூலங்கள் விரைவாகப் பெறப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.
அரசு வழக்கறிஞரின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, இந்த முறைகேடு வழக்கு தொடர்பாக 6 மாத காலத்துக்குள் ஊழல் தடுப்பு நீதிமன்றம் விசாரணையை நடத்தி முடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.