கமல்ஹாசனின் பெயர், படங்களை வணிக நோக்கில் பயன்படுத்த இடைக்காலத் தடை: சென்னை உயர் நீதிமன்றம் | Kamal Hassan |

கார்ட்டூன் போன்ற விமர்சன நோக்கிலான படைப்புகளில் பயன்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை....
கமல்ஹாசன் (கோப்புப்படம்)
கமல்ஹாசன் (கோப்புப்படம்)
1 min read

நடிகர் கமல்ஹாசனின் பெயரையும் படங்களையும் வர்த்தக நோக்கில் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ‘நீயே விடை’ என்ற நிறுவனம், தனது படம், பெயர், உலக நாயகன் பட்டம், பிரபல வசனங்கள் உள்ளிட்டவற்றை அனுமதி இன்றி வணிக நோக்கில் பயன்படுத்தி வருவதாகக் குற்றம்சாட்டி கமல்ஹாசன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடரப்பட்டது.

கமல் தரப்பு வாதம்

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கமல்ஹாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சதீஷ் பராசரன் மற்றும் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோர் வாதாடுகையில், “தனி உரிமையை பாதுகாக்கும் வகையில், ‘நீயே விடை’ நிறுவனம் மட்டுமன்றி, வேறு எந்த நிறுவனங்களும், கமல்ஹாசனின் பெயர், படம், பட்டங்கள் மற்றும் வசனங்களை அனுமதியின்றி பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.

இடைக்காலத் தடை

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அனுமதின்றி, வர்த்தக நோக்கத்துடன் கமல்ஹாசனின் பெயர், படங்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த இடைக்கால தடை விதித்தார். மேலும், மனுவுக்குப் பதிலளிக்கும்படி நீயேவிடை நிறுவனத்திற்கு உத்தரவிட்டு, விசாரனையை பிப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைத்தார். செயற்கை நுண்ணறிவு மூலம் கமல்ஹாசனின் உருவத்தையும் குரலையும் போலியாக உருவாக்கித் தவறாகப் பயன்படுத்துவதற்கும் தடை விதித்த நீதிபதி, இதுபோன்ற செயல்கள் ஒரு கலைஞரின் பல ஆண்டு கால உழைப்பால் உருவான நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

கார்ட்டூன்களுக்கு விதிவிலக்கு

அதேநேரத்தில் ஆக்கப்பூர்வமான கருத்துக்குத் தடையாக இருக்காது என்றும் நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது. அதாவது, கார்ட்டூன்கள், விமர்சன நோக்கிலான படைப்புகளில் கமல்ஹாசனின் உருவத்தைப் பயன்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை. வர்த்தக நோக்கத்தில் பயன்படுத்த மட்டுமே தடை விதிக்கப்படுகிறது என்றும் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக, வேறு எவரும் அனுமதின்றி தனது புகைப்படம், பெயரை பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றத்தில் கிடைத்த உத்தரவு குறித்து தமிழ், ஆங்கில பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிடவும் கமல்ஹாசன் தரப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Summary

The Madras High Court has ordered an interim ban on the use of actor Kamal Haasan's name and images for commercial purposes.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in