திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பதிலளிக்க அரசுக்கு உத்தரவு | Tiruvannamalai |

வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை பதிலளிக்க உத்தரவு...
சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)
சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)
1 min read

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கார்த்திகை மாதம் திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா பிரசித்தி பெற்ற ஒன்றாகும். அப்போது தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் திருவண்ணாமலை தீபத்தைத் தரிசிக்க லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதன்படி கார்த்திகை மாதம் நேற்று (நவ. 16) தொடங்கிய நிலையில், திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 3 அன்று நடைபெறுகிறது.

அப்போது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், நெரிசல் சம்பவங்களைத் தவிர்க்கும் வகையில் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், கூட்டத்தை கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் போதுமான காவல்துறையினரை பணியில் அமர்த்த வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கூட்டத்தை கண்காணிக்க வேண்டும். வாகன போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும். கிரிவலப் பாதையில் போலி சாமியார்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளை அனுமதிக்க கூடாது. கோயிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, கார்த்திகை தீபத் திருவிழா அன்று மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து தமிழ்நாடு அரசு, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இயக்குநர் ஆகியோர் நவம்பர் 24-க்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 24-க்கு ஒத்தி வைத்தார்.

Summary

The Madras High Court has ordered the district administration and police to respond to the security arrangements made in Tiruvannamalai ahead of the Karthigai Deepam festival.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in