பொதுக்கூட்டங்களுக்கு வரைவு வழிகாட்டு விதிமுறைகள்: நவ. 20-க்குள் சமர்ப்பிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | Madras HC |

அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்கும்போது தேவையில்லாத நிபந்தனைகளை விதிக்கக் கூடாது...
சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)
சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)ANI
2 min read

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோ நடத்துவதற்கான வரைவு வழிகாட்டு விதிமுறைகளைச் சமர்ப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு கூடுதலாக 10 நாள்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூரில் கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அரசியல் கட்சி தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த அக்டோபர் 27 அன்று, அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு விதிமுறைகளை 10 நாள்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த நவம்பர் 6 அன்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளையும் கூட்டி தமிழ்நாடு அரசு ஆலோசனை மேற்கொண்டது. அதில், பொதுக்கூட்டங்கள் நடத்த அரசியல் கட்சிகளுக்கு வைப்புத் தொகை நிர்ணயிப்பது உள்ளிட்ட பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், அந்த வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பொதுக் கூட்டங்கள், ரோடு ஷோக்களுக்கான வரைவு வழிகாட்டு விதிமுறைகள் வகுப்பது தொடர்பாக அரசு பல்வேறு கட்டங்களில் ஆலோசனை நடத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதனடிப்படையில், 40-க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு வரைவு வழிகாட்டு விதிமுறைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவர்களின் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளன. இந்த கருத்துக்களைப் பெற்று, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி இறுதி வரைவு வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க ஒரு மாத கால அவகாசம் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி, “ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு விதமாக நிபந்தனைகள் விதிக்கப்படுகிறதா? கடைசி நேரத்தில் அனுமதி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். அரசியல் கட்சிகளுக்கு பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கு அனுமதி வழங்கும்போது, தேவையில்லாத நிபந்தனைகளை விதிக்கக் கூடாது. 15 நாள்களுக்கு முன் விண்ணப்பிக்கப்பட்டால் 5 - 7 நாள்களில் முடிவெடுத்து தெரிவிக்க வேண்டும்” என்று அரசுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், நவம்பர் 20-க்குள் வரைவு வழிகாட்டு விதிமுறைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூடுதல் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 21-க்கு ஒத்தி வைத்தனர்.

Summary

The Madras High Court has granted an additional 10 days to the Tamil Nadu government to submit the draft guidelines for political parties to conduct public meetings and road shows.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in