
தமிழக அரசு எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தவுள்ள திட்டங்களில் முதல்வர் உள்பட வாழும் நபர்களின் பெயர்கள் இடம்பெறக்கூடாது என்றும், அரசுத் திட்ட விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர்களின் பெயர்களையோ, புகைப்படங்களையோ பயன்படுத்தக்கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்புடைய மற்றொரு வழக்கில் முன்னதாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மேற்கோள்காட்டி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
`உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில்’ முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை விதிக்கக்கோரியும், திட்டம் தொடர்பான விளம்பரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக்கோரியும், அதிமுக எம்.பி. சி.வி. சண்முகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணையை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் நடந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தவுள்ள திட்டங்களில் முதல்வர் உள்பட வாழும் நபர்களின் பெயர்கள் இடம்பெறக்கூடாது என்றும், அரசுத் திட்ட விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர்களின் பெயர்களையோ, புகைப்படங்களையோ பயன்படுத்தக்கூடாது என்றும் தெரிவித்தனர்.
குறிப்பாக, ஆளுங்கட்சியின் பெயர், சின்னத்தை பயன்படுத்துவது உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு விரோதமானது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
அதேநேரம் மாநில அரசு நலத்திட்டம் தொடங்குவது, செயல்படுத்துவது ஆகியவற்றுக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று உயர் நீதிமன்ற அமர்வு தெளிவுபடுத்தியது.
மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு, திமுக தரப்பில் உரிய பதில் மனுத்தாக்கல் செய்யுமாறு கூறி, அதற்கு கால அவகாசம் வழங்கும் விதமாக வழக்கு விசாரணை ஆகஸ்ட் 13-க்கு ஒத்தி வைக்கப்பட்டது.