சுதந்திர தினத்தன்று இரு சக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக பதிலளிக்கக் கோரி காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுதந்திர தினத்தன்று தமிழ்நாடு முழுக்க மாவட்ட தலைநகரங்களில் தேசியக் கொடியுடன் இருசக்கர வாகனப் பேரணி நடத்த தமிழக பாஜக திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டிருக்கிறது. இதற்குக் காவல் துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
இதை எதிர்த்து பாஜகவின் கோவை மாவட்டச் செயலாளர் கிருஷ்ண பிரசாத் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதை இன்றே அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகக் கூறிய சென்னை உயர் நீதிமன்றம் மனு மீது விசாரணை நடத்தியது.
அப்போது, யார் வேண்டுமானாலும் தேசியக் கொடியை ஏந்திச் செல்லலாம் எனவும், பேரணி செல்லும் இடங்களை அறிந்து வாகன நெரிசல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் காவல் துறை பார்த்துக்கொள்ளலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இதுதொடர்பாக பதிலளிக்குமாறு காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.