
சென்னையில் பருவநிலை மாற்றம் காரணமாக மெட்ராஸ் ஐ எனப்படும் கண் தொற்று நோய் பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மெட்ராஸ் ஐ எனும் தொற்று நோய் எளிதில் குணப்படுத்தக்கூடிய சாதாரண தொற்று நோய் என்றாலும், அதை ஆரம்பத்திலேயே கண்டறியவில்லை என்றால் சிரமம் ஏற்படும்.
இந்த மழைக் காலத்தில் மழையும் வெயிலும் மாறி மாறி வருவதால், வைரஸ் கிருமி வளர்ந்து கண் நோய் பரவும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது காற்று மூலமாக பரவக்கூடும்.
பொதுவாக ஒருவருக்கு ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு ஏற்பட்டால், மற்றொருவருக்கும் அந்த பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இந்நிலையில் கண் எரிச்சல், கண்ணில் நீர் சுரத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் கையைக் கழுவாமல் கண், காது, மூக்கு போன்ற உடல் உறுப்புகளைத் தொடக்கூடாது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், அனைவரும் விழிப்புணா்வுடனும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.