

ஜாய் கிரிஸில்டாவை சுய விருப்பத்துடன் திருமணம் செய்யவில்லை, அது மிரட்டலின் பேரில் நடந்த திருமணம் என்று மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.
பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்துவிட்டு, நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா காவல் துறையிலும் மகளிர் ஆணையத்திலும் புகாரளித்தார். இதுகுறித்த விசாரணை கடந்த அக்டோபர் 16-ல் நடந்தது. இதற்கிடையில் கடந்த அக்டோபர் 31 அன்று ஜாய் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து, மகளிர் ஆணையத்தின் விசாரணையில் ஜாய் கிரிஸில்டாவைத் தான் திருமணம் செய்துகொண்டதாகவும், அவருக்குத் தற்போது பிறந்தது தனது குழந்தைதான் என்றும் மாதம்பட்டி ரங்கராஜ் நேற்று (நவ.4) ஒப்புக் கொண்டார். இதன் அடிப்படையில், அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று காவல்துறை ஆணையருக்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஆணையத்திற்கும் மகளிர் ஆணையம் பரிந்துரைத்திருந்தது.
இந்நிலையில், மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை என்று மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“நான் ஜாய்யை தன்னிச்சையாகத் திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை நான் திட்டவட்டமாக கூறுகிறேன். ஜாய் என்னை அவதூறு செய்வதற்காக தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக பலமுறை மிரட்டியதால், இந்த திருமணம் மிரட்டலின் பேரில் நடந்தது. செப்டம்பர் 2025 இல், ஆயிரம் விளக்குகள், மகளிர் காவல் நிலையத்தின் புலனாய்வு அதிகாரி முன்பும், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்திலும் விரிவான வாக்குமூலங்களை நான் ஏற்கனவே அளித்துள்ளேன், இந்தத் திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு, என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.
மகளிர் ஆணையம் முன் நடந்த அடுத்தடுத்த நடவடிக்கைகளின் போது, ஜாய் எனக்கு மாதத்திற்கு ரூ. 1,50,000 பராமரிப்புத் தொகையாகவும், தனது சொகுசுக் காருக்கு ரூ.1.25 லட்சம் மாதாந்திர தவணையையும் செலுத்த வேண்டும் என்றும் கோரினார். நான் அந்த கோரிக்கையை மறுத்துவிட்டேன்.
நான் ஒருபோதும் டிஎன்ஏ பரிசோதனையை மறுத்ததில்லை, மேலும் அந்தக் குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளேன். இந்த வாக்குமூலம் ஏற்கனவே ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய விசாரணை அதிகாரி முன் செப்டம்பர் 2025 அன்றே பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மகளிர் ஆணையத்தின் பரிந்துரை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த வாக்குமூலத்தையும் அளிக்கவில்லை. அந்த பரிந்துரை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன், மேலும் உண்மையை நிறுவ அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்பேன். ஆணையத்தின் முன் நடந்த அனைத்தும் சட்டத்தின்படி நீதிமன்றத்தில் முறையாக சமர்ப்பிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.
Madampatti Rangaraj has stated that he did not marry Joy Crizildaa willingly, and that the marriage took place under threat.