ஆண்டாள் ஏற்படுத்தும் அதிசயம்...: நிர்மலா சீதாராமன் பேச்சு

அயோத்தி தீர்ப்பை நீதிபதி சொன்னபோது, ஆஞ்சநேயரின் பின் தலைமுறை நீதிமன்றத்தின் மேல் உட்கார்ந்திருந்ததாம்.
ஆண்டாள் ஏற்படுத்தும் அதிசயம்...: நிர்மலா சீதாராமன் பேச்சு
2 min read

ஆண்டாளின் திருப்பாவையை விவரிக்கும் மால்யத என்கிற ஆங்கில நூல் சென்னையில் இன்று வெளியிடப்பட்டது. ஜெயசுந்தர் எழுதியுள்ள இப்புத்தகத்தை கேஷவின் படங்கள் அலங்கரித்துள்ளன. ஆக்ஸிஜன் பதிப்பித்துள்ள இந்நூலின் வெளியீட்டு விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இளையராஜா, ரங்கராஜ் பாண்டே ஆகியோர் பங்கேற்றார்கள். மால்யத நூல் வெளியீட்டு விழாவின் நேரலை ஒளிபரப்பை இங்குக் காணலாம்.

இந்த விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

தெய்வ அனுக்கிரகத்தால் இப்பேர்ப்பட்ட மேதைகளுடன் நான் மேடையில் அமர்ந்துள்ளேன்.

ரங்கராஜ் பாண்டே பேசியபோது, நான் மோஸ்ட் வாண்டட் என்றார். தெரிந்து சொன்னாரோ, தெரியாமல் சொன்னாரோ... நிஜமாகவே நான் மோஸ்ட் வாண்டட் தான் இன்றைக்கு. அதுவும் தமிழ்நாட்டில், மோஸ்ட் வாண்டட் நிதியமைச்சர் என்று எனக்கு போஸ்டர் ஒட்டுவார்கள். என் பேச்சை எளிமையான நகைச்சுவையுடன் ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்.

நூலாசிரியர் ஜெயசுந்தரின் முன்னோர்கள் செய்த புண்ணியம் அவருக்கு வந்துள்ளது. திருப்பாவையில் ஆண்டாள், அவன் என் மனத்தைக் கவர்ந்துள்ளான் என எளிமையாகக் கூறுகிறார். சிறிய பெண்ணாக இருந்தாலும் நமக்கு ஏற்படும் ஆச்சர்யம், அவர் இயற்கையைக் கவனித்த விதம். அதை நடைமுறை வாழ்க்கையில் சொல்லும் அளவுக்கு எடுத்துக்கொண்ட விதம். அதனால் தான் அவர் பாட்டில் ஈர்ப்பு ஏற்படுகிறது. சமீபத்தில் தான் ஆனைச்சாத்தான் என்றால் என்ன எனக் கேள்விப்பட்டேன். அதெல்லாம் கூட கவனித்திருக்கிறார். சிறிய வயதிலிருந்து திருப்பாவை உரையுடன் படித்துள்ளேன். ஆனால் குகைக்குள் இருக்கும் ஒரு சிங்கம் எப்படி பிடரியைச் சிலிர்த்துக்கொண்டு வெளியே வரும் என்பதை ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயிலில் சேவை செய்யும் பட்டரின் பெண்ணுக்கு எப்படிப் புரியும்? இதெல்லாம் அமானுஷ்யம். தெய்வம் ஆண்டாளுக்குள் போட்ட கூடுதலான... எம்படெட்டட் சிப்ஸ் என்று இன்று பேசுகிறோம் இல்லையா... அது ஆண்டாளுக்குள் செலுத்தப்பட்டுள்ளது. அதுதான் ஜெயசுந்தரின் நூலிலும்.

ராமாயணம் பற்றிப் பேசும்போதும் துளசிதாசர் பற்றிப் பேசும்போதும்... துளசிதாசர், அனுமாரின் அவதாரம் என்பார்கள். இதன் தத்துவம், இந்த நூலின் ஆரம்பத்திலும் உள்ளது. நான் வைகுண்டத்தில் இல்லை, வேறுவிதமான கோயில்களிலும் இல்லை, பிறகு எங்கே இருக்கிறேன்... பக்தியுடன் பகவன் நாமத்தைச் சொல்லும் இடத்தில் இருப்பேன். அதுதான் அனுமார்.

இது உறுதிப்படுத்தபட்ட ஒன்று என்பதால் சொல்கிறேன். அயோத்தி தீர்ப்பை நீதிபதி சொன்னபோது, ஆஞ்சநேயரின் பின் தலைமுறை நீதிமன்றத்தின் மேல் உட்கார்ந்திருந்ததாம். நம்பவேண்டும் என்றால் நம்புங்கள், இல்லை என்றால் இல்லை. பகவன் நாமத்தைச் சொல்கிற இடத்தில் ஆஞ்சநேயர் வருவார் என்பது நம்முடைய ஆழ்ந்த நம்பிக்கை.

எளியமுறையில் ஆண்டாள் சொன்னதைப் படித்துக்கொண்டே சென்றால், வேத காலத்தில் இருந்து இருக்கக்கூடிய உரையாடலின் தன்மை தெரிகிறது. ஆண்டாளும் அதைத்தான் செய்கிறார். நப்பின்னை மேல் உள்ள வியப்பை அவ்வளவு அழகாக எடுத்துச் சொல்கிறார்.

மனம் லயித்துப் படித்தால் சில சொற்களுக்கு மட்டும் விளக்கம் பார்த்தால், எல்லாம் கண் முன்னால் வரும். பக்திக்கு எத்தனை விதங்கள்... அதையும் எடுத்துச் சொல்கிறார். ஆண்டாள் நமக்குச் சொல்வது சமர்ப்பணம்... நீ தான் எல்லாமே, நான் உனக்குச் சரண்... நீயே என்னைச் செய்ய வைக்கிறாய்... அதனால் நான் செய்கிறேன். நான் ஒன்றுமே இல்லை. இந்த வெற்றிக்கான காரணம் நான் என்கிற உணர்வு இல்லாமல் போய்விட்டால்... இசைஞானி போல செய்வதைப் போல அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யவேண்டும்.

ஆண்டாள் போலவே ஜெயசுந்தரும் எளிமையாகச் சொல்லி, அதேநேரத்தில் பல அம்சங்களை உள்ளே கொண்டு வருகிறார். பைட் அளவில் எல்லாப் பாடல்களையும் கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு மக்களுக்கு இது எல்லாம் தெரியும். அப்படிச் சொன்னால் கூட ஜெயசுந்தரின் விளக்கத்தை தமிழ், தெலுங்கிலும் கூறவேண்டும். இந்தப் புத்தகத்தைத் தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, அஸ்ஸாமி என எல்லா மொழிகளிலும் வெளியிட வேண்டும்.

கேஷவின் ஓவியங்கள் பற்றி அரை மணி நேரம் பேசலாம். நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர் என ஒருமுறை அவருக்கு மெசேஜ் செய்தேன். கிருஷ்ணரைப் பற்றி நாளுக்கொரு ஓவியம் வரைந்துள்ளார். கற்பனை செய்து பாருங்கள். அபாரம் இல்லையா... அவசர வேலைகளின் காரணமாக வாயில் கிருஷ்ணர் நாமத்தைச் சொல்ல யோசிக்கிறோம்... அவரோ தன் மனத்தில் உள்ளதை ஓவியத்தில் வெளிப்படுத்தி விடுகிறார். இந்தப் புண்ணியம் கேஷவின் சந்ததியினருக்குப் போய்ச் சேரும்.

இந்த விழாவில் என்னை அழைத்ததற்காக ஜெய்சுந்தருக்கு நன்றி சொல்லப் போவதில்லை, ஆயிரம் நமஸ்காரம். அவருடைய பணியை நான் பாராட்டுகிறேன் என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in