
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக தன் மீது முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்வைத்த குற்றச்சாட்டுக்கு தமிழக சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
அண்ணா பல்கலை. வழக்கு தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட காணொளியில் மா. சுப்பிரமணியன் மீது குற்றம்சாட்டி பேசியதாவது,
`திமுகவின் 170-வது வட்ட செயலாளர் கோட்டூர் சண்முகமும், (குற்றவாளி) ஞானசேகரனும் டிச.24-ல் காலையில் இருந்து மாலை வரை 6 முறை (தொலைபேசியில்) பேசுகிறார்கள். எதற்காக 24-ம் தேதி கைது செய்யப்பட்ட ஞானசேகரன் கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் இருந்து வெளியே விடப்பட்டார்?
ஞானசேகரன் கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் இருந்து வெளியே வந்தபிறகு இரவு 8.30 மணிக்கு மேல் அமைச்சர் மா. சுப்பிரமணியனும், கோட்டூர் சண்முகமும் பேசுகிறார்கள். மறுபடியும் 8.32 மணிக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியனும், கோட்டூர் சண்முகமும் பேசுகிறார்கள். எதற்காக? யாரை காப்பாற்றுவதற்காக இவ்வளவு பதட்டம்?’ என்றார்.
இந்நிலையில், எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (ஜூன் 3) பங்கேற்றார்.
அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து மா. சுப்பிரமணியனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவர் கூறியதாவது,
`அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அந்த (பாலியல் வன்கொடுமை) சம்பவத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. முதல்வர் வசம் இருக்கும் காவல்துறை மிகச் சிறப்பான நடவடிக்கை எடுத்து, ஐந்தே மாதங்களில் (குற்றவாளிக்கு) மிகப்பெரிய அளவிலான தண்டனையை பெற்றுத் தந்திருக்கிறது.
நீதியரசர்கூட காவல்துறையின் செயல்பாட்டுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். அண்ணாமலை பேசியதை நானும் பார்த்தேன். சண்முகம் என்கிற வட்ட செயலாளர் எனக்கு தொலைபேசியில் அழைத்ததாக அவர் கூறியுள்ளார்.
இதெல்லாம் ஒரு குற்றச்சாட்டா? நான் ஒரு மாவட்டச் செயலாளர். என் தலைமையில் இருக்கும் நிர்வாகத்தில் 82 வட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் 10-15 பேர் என்னை அழைப்பார்கள்.
இந்த தேதியில், இந்த நேரத்தில் வட்ட செயலாளர் எனக்கு அழைத்ததால், என்னை விசாரிக்கவேண்டும் என்று அவர் கூறுகிறார். இது என்ன குற்றச்சாட்டு என்றே எனக்குத் தெரியவில்லை. அவருக்கும் இது தெரியுமா என்பதும் தெரியவில்லை’ என்றார்.