
சென்னை உயர் நீதிமன்றத்தின் 36-வது தலைமை நீதிபதியாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த எம்.எம். ஸ்ரீவஸ்தவா இன்று (ஜூலை 21) பதவி எற்றார். கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவருக்கு பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார்.
கடந்தாண்டு செப்டம்பர் 27 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் பதவியேற்றார்.
இந்நிலையில், கே.ஆர். ஸ்ரீராமை ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், அங்குள்ள தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவாவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் மாற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த மே 26-ல் அளித்த பரிந்துரையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அண்மையில் ஏற்றுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதவி ஏற்பு உறுதிமொழி செய்து வைத்தார்.
கடந்த 1964-ல் அன்றைய மத்திய பிரதேச மாநிலத்திற்கு உட்பட்ட பிலாஸ்பூரில் பிறந்த ஸ்ரீவஸ்தவா, சட்டப்படிப்பை முடித்த பிறகு 1987-ல் மத்திய பிரதேச பார் கவுன்சிலில் பதிவு செய்துகொண்டார்.
இதைத் தொடர்ந்து ராய்கர் மாவட்ட நீதிமன்றத்திலும், 2000-ல் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து சத்தீஸ்கர் மாநிலம் புதிதாக பிரிக்கப்பட்ட பிறகு உருவான சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்திலும் அவர் வழக்காடி வந்தார். அதன்பிறகு சில காலம் அரசு வழக்கறிஞராக பணியாற்றிய ஸ்ரீவஸ்தவா, 2005-ல் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
2009-ல் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட ஸ்ரீவஸ்தவா, 2021-ல் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து கடந்த 6 பிப்ரவரி 2024-ல் ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற ஸ்ரீவஸ்தவா தற்போது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் 5 அன்று ஸ்ரீவஸ்தவா பணி ஒய்வு பெறுகிறார்.