அக்டோபர் 21-ல் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: வானிலை ஆய்வு மையம் | Chennai Rains |

அக்டோபர் 21 காலைக்குள் மீனவர்கள் கரைக்குத் திரும்ப வேண்டும் என எச்சரிக்கை.
அக்டோபர் 21-ல் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: வானிலை ஆய்வு மையம் | Chennai Rains |
2 min read

வங்கக் கடலில் அக்டோபர் 21-ல் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் அமுதா அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அக்டோபர் 1 முதல் இன்று வரை மொத்தம் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாகவும் இது இயல்பை விட 54% அதிகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

"கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பில் மழை அளவைப் பார்த்தால், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் தீவிரமாக உள்ளது. நான்கு இடங்களில் மிகக் கனமழை பதிவாகியுள்ளது.

கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) – 14 செ.மீ., விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, கோவிலங்குளம், கோவை மாவட்டம் மக்கினம்பட்டி ஆகி இடங்களிலும் தலா 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளன. தமிழகத்தில் 17 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது.

இன்று அக்டோபர் 19 அன்று தெற்குக் கேரளம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

அரபிக் கடலில் நேற்று அக்டோபர் 18 அன்று தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள–கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, இன்று அக்டோபர் 19 அன்று காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது.

இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

வங்கக்கடல் பகுதியில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அக்டோபர் 21 அன்று வாக்கில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.

அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுபெற வாய்ப்பு உள்ளது.

அக்டோபர் 19 முதல் அக்டோபர் 24 வரை, அதாவது அடுத்த ஆறு தினங்களுக்கு தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 25 அன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும்.

கனமழையைப் பொறுத்தவரை அடுத்த நான்கு நாள்களுக்கு அக்டோபர் 19 முதல் அக்டோபர் 22 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கன முதல் மிகக் கனமழை எச்சரிக்கையைப் பொறுத்தவரை, அதற்கு அடுத்து மூன்று நாள்கள், அதாவது அக்டோபர் 23 முதல் அக்டோபர் 25 வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக, அக்டோபர் 20 முதல் அக்டோபர் 24 வரை வட கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

அக்டோபர் 23 அன்று வட கடலோர மாவட்டங்கள் — சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிகக் கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாவதைப் பொறுத்து மாற்றம் இருக்கும். அடுத்து வரும் நாள்களில் தகவல் தெரிவிக்கப்படும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

முதலில் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் அக்டோபர் 21 அன்று காலைக்குள் கரைக்குத் திரும்ப வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அடுத்த ஐந்து நாள்களுக்கு அக்டோபர் 19 முதல் அக்டோபர் 23 வரை மீனவர்கள் செல்லக் கூடாத கடல்பகுதிகள்:

  • தமிழகக் கடலோர பகுதிகள்

  • மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள்

  • தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகள்

அரபிக்கடலில் செல்லக் கூடாத பகுதிகள்

  • கேரள–கர்நாடக கடலோர பகுதிகள்

  • லச்சத்தீவு, மாலத்தீவு பகுதிகள்

  • தெற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகள்

இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசும் வாய்ப்பு உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த இரண்டு நாள்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27–28 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.

தமிழகத்தில் மழை அளவு அக்டோர் 1 முதல் இன்றைய தேதி வரை 14 செ.மீ. பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 58% அதிகம்" என்றார் அமுதா.

Chennai Rains | Weather Alert | Weather Report | Chennai Rain | Tamil Nadu Rain | Bay of Bengal | Rain Alert | Regional Meteorological Centre |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in