
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (டிச.25) வலுவிழக்கும் எனவும், வரும் டிச.30 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா. செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளவை பின்வருமாறு,
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் (தெற்கு ஆந்திர - வட தமிழக கடலோரப் பகுதி) கடந்த டிச.22-ல் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று (டிச.25) வலுவிழக்கும்.
மேலும், லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் வட தமிழகத்தின் சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி – காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் இன்று மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் டிச.30 வரை தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
வட தமிழக கடலோரப் பகுதி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதி, மத்திய மேற்கு - தென் மேற்கு வங்கக் கடல் பகுதி ஆகியவற்றில் இன்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீச வாய்ப்புள்ளதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.