தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 5.30 மணியளவில் இது உருவாகியுள்ளது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும். மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக புதுச்சேரி, வடதமிழகம், தெற்கு ஆந்திரப் பகுதிகளில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்.
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது அக்டோபர் 16 அன்று சென்னை கடல் பகுதிக்கு அருகே நகர்ந்து செல்லக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், அக்டோபர் 16, அக்டோபர் 17 ஆகிய தேதிகளில் மிகக் கனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் (தமிழ்நாடு வெதர்மேன்) சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பகல் நேரத்தில் பெரும்பாலும் மழை இருக்காது என்று கணித்துள்ள அவர், இரவு முதல் காலை நேரங்களில் மட்டுமே மழைப் பொழிவு அதிகம் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகப் பதிவிட்டுள்ளார்.