அதிமுக 10 சதவீத வாக்குகளை இழந்துவிட்டதாக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியினருடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். ராயப்பேட்டையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி 10 சதவீத வாக்குகளை இழந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்.
"இழந்த வாக்குகளை மீட்கும் வகையில் செயல்பட வேண்டும். இளைஞர்களின் விருப்பம் குறித்து அறிந்து, அதற்கேற்ப ஃபேஸ்புக், எக்ஸ் தளம், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட வேண்டும். இளைஞர்களிடத்தில் 40 சதவீத வாக்குகள் உள்ளன. இவற்றை ஈர்த்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி காண முடியும்.
அதிமுகவின் செய்திகளைத் தனி யூடியூப் சேனல் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை பயன்படுத்தி, இதில் பதிவிட வேண்டும்" என்று பேசியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 20.4 சதவீத வாக்குகளைப் பெற்றது.