மதுரை வைகையாற்றில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் எழுந்தருளினார்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 21-ல் நடைபெற்றது. நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
அழகர் கோயிலிலிருந்து சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகர் வேடத்தில் இன்று அதிகாலை மதுரை வந்தடைந்தார். மூன்று மாவடியில் கள்ளழகரை பக்தர்கள் வரவேற்கும் எதிர்சேவை நிகழ்வு நடைபெற்றது.
அதிகாலை 3 மணியளவில் தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்ட கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா முழக்கங்களுக்கு மத்தியில் வைகையாற்றில் இறங்கினார்.
கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவத்துக்காக ஏராளமான பக்தர்கள் நேற்றிரவு முதலே வைகையாற்றில் கூடி வந்தார்கள். பக்தர்கள் ஆடிப்பாடி, தண்ணீரைப் பீய்ச்சியடித்து கள்ளழகரை வழிபட்டார்கள்.