மக்களவை தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: 7 மாநிலங்களை ஒருங்கிணைக்க திமுக முடிவு!

நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நாளை (மார்ச் 10) தில்லியில் தொடங்கவுள்ளது.
மக்களவை தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: 7 மாநிலங்களை ஒருங்கிணைக்க திமுக முடிவு!
1 min read

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மாநில உரிமைகளை நிலைநாட்டுவதற்காக 7 மாநிலங்களைச் சேர்ந்த கட்சிகளை ஒருங்கிணைத்து செயல்பட திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், இன்று (மார்ச் 9) காலை சென்னை திமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நாளை (மார்ச் 10) தில்லியில் தொடங்கவுள்ள நிலையில், அது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மக்களவை தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்,

1) தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் முதல்வர் ஸ்டாலினின் முயற்சிகளுக்கு துணை நின்று, நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினைகளை முன்வைத்துப் போராடி, தமிழ்நாட்டிற்குரிய மக்களவை தொகுதிகளில் ஒன்று கூட குறையாத வகையிலும், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டிற்குரிய தொகுதிகளின் விகிதாசாரத்தைத் தக்க வைப்பதிலும் வெற்றியை ஈட்டுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

2) மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதால் மக்களவைத் தொகுதிகளை இழக்க நேரிடும் அபாயத்தில் உள்ள ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிஷா, மேற்கு வங்கம், பஞ்சாப் என பாதிக்கப்படவிருக்கும் 7 மாநிலங்களைச் சார்ந்த கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் போராட்டக் களத்திற்கு அழைத்து வரும் பொறுப்பைக் திமுக எம்.பி.க்கள், கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்களுடன் இணைந்து மேற்கொள்வார்கள் என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

3) மக்களவை தொகுதி மறுசீரமைப்பில் மாநில உரிமைகளை நிலைநாட்டும் வகையில், இண்டியா கூட்டணி உறுப்பினர்கள் மட்டுமின்றி ஜனநாயகத்தைக் காப்பதில் உறுதியாக உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து செயல்படுவது என இக்கூட்டம் தீர்மானிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in