சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தது ஏன்?: ஆளுநர் மாளிகை விளக்கம் | Governor R.N. Ravi | TN Assembly |

சட்டப்பேரவையில் ஆளுநர் பேசும்போது மைக் அணைக்கப்பட்டது...
ஆளுநர் மாளிகை (கோப்புப்படம்)
ஆளுநர் மாளிகை (கோப்புப்படம்)
2 min read

தமிழ்நாடு சட்டப்பேரவையிலிருந்து இன்று அளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தது ஏன் என்பது குறித்து ஆளுநர் மாளிகை விரிவான விளக்கத்தை அளித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தார். இதனைக் கண்டித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். இதற்கிடையில், வெளிநடப்பு செய்ததற்கும், தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த உரையை வாசிக்காமல் இருந்ததற்குமான காரணங்களைப் பட்டியலிட்டு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையான லோக்பவன் விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஆளுநர் வெளிநடப்புக்கான காரணங்கள்

சட்டப்பேரவையில் அரசு தயாரித்த உரையை ஆளுநர் அவர்கள் வாசிக்க மறுத்ததற்கான காரணங்கள் கீழ்வருவன:

  1. ஆளுநரின் ஒலிவாங்கி (மைக்) மீண்டும், மீண்டும் அணைக்கப்பட்டது மற்றும் அவர் பேச அனுமதிக்கப்படவில்லை;

  2. தயாரிக்கப்பட்ட ஆளுநர் உரையில் ஆதாரமற்ற பல கோரல்களும், தவறான தகவல்களும் இடம்பெற்றிருந்தன. மக்களைப் பாதிக்கும் பல முக்கியப் பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன;

  3. மாநிலம் ரூ.12 லட்சம் கோடிக்கும் அதிகமான பெரும் முதலீடுகளை ஈர்த்துள்ளது என்ற கூற்று உண்மைக்கு எட்டாத தொலைவில் உள்ளது. வருங்கால முதலீட்டாளர்களுடனான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காகித அளவிலேயே உள்ளன.

  4. போக்சோ பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 55% மேலாகவும், பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் சம்பவங்கள் 33%-க்கு மேலாகவும் அபாயகரமாக அதிகரித்துள்ள போதிலும், பெண்களின் பாதுகாப்புப் பிரச்சினை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது;

  5. போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளின் பரவலான புழக்கம் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான வழக்குகள் அதிகரித்துள்ளன. இதனால் ஒரே ஆண்டில் 2000 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். இவை வெகு சாதாரணமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

  6. தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்களும், தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையும் கடுமையாக அதிகரித்து வருகின்றன. இருப்பினும், இவை முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளன.

  7. நமது மாநிலத்தில் ஒரே ஆண்டில் சுமார் 20,000 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தமிழ்நாடு இந்தியாவின் தற்கொலைத் தலைநகரம் என்று குறிப்பிடப்படுகிறது.

  8. கல்வித் தரத்தில் தொடர்ச்சியான சரிவும், கல்வி நிறுவனங்களில் பரவலான நிர்வாகச் சீர்கேடும் நமது இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதகமாகப் பாதிக்கின்றன. 50%-க்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. மேலும், கௌரவ விரிவுரையாளர்கள் மாநிலம் முழுவதும் அமைதியின்மையுடன் உள்ளனர். நமது இளைஞர்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்கின்றனர். இவை அரசுக்கு ஒரு கவலையாகத் தெரியவில்லை.

  9. பல ஆண்டுகளாகத் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படாததால், பல ஆயிரம் கிராம ஊராட்சிகள் செயலிழந்து கிடக்கின்றன. இருப்பினும், இது ஆளுநர் உரையில் குறிப்பிடப்படவே இல்லை.

  10. மாநிலத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான கோயில்கள் அறங்காவலர் குழுக்கள் இல்லாமல், மாநில அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படுகின்றன. பக்தர்களின் உணர்வுகள் ஈவு இரக்கமின்றிப் புறக்கணிக்கப்படுகின்றன.

  11. தொழிலை நடத்துவதற்கான வெளிப்படையான மற்றும் மறைமுக செலவுகள் காரணமாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பெரும் அழுத்தத்தில் உள்ளன. இந்த விவகாரம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.

  12. ஏறக்குறைய அனைத்துத் துறைகளிலும் கீழ்மட்ட ஊழியர்களிடையே பரவலான அதிருப்தி நிலவுகிறது. அவர்கள் அமைதியற்றவர்களாகவும் விரக்தியுடனும் உள்ளனர். அவர்களின் நியாயமான குறைகளைத் தீர்ப்பதற்கான வழிகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை;

  13. தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது மற்றும் அடிப்படை அரசியலமைப்பு கடமை புறக்கணிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

The Governor's Office has provided a detailed explanation as to why Governor R.N. Ravi walked out of the Tamil Nadu Legislative Assembly today.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in