லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்தது கடந்த இரு நாள்களாக தமிழ்நாட்டில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இதுதொடர்பாக காவலர்கள் 6 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். மேற்கொண்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.
மாஜிஸ்திரேட் வெங்கடேஷ் பிரசாத் மடப்புரம் காளி கோயில், உதவி ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இன்று ஆய்வு செய்தார்.
லாக்கப் மரணங்கள் என அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை வைத்து வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் லாக்கப் மரணங்களில் கடமை தவறியது யாராக இருந்தாலும், அரசின் நடவடிக்கை மிகக் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும்!
மீறி நடந்தால் அதில் ஈடுபட்டவர் ரவுடியானாலும், அரசியல் பின்புலம் கொண்டவரானாலும், காவலரே ஆனாலும் அதற்கான தண்டனையை விரைவில் பெற்றுத் தந்து நீதி நிலைநாட்டப்படும் ஆட்சியாகத்தான் இந்த அரசு திகழ்ந்து வருகிறது.
'போதைப் பொருள் - கள்ளச்சாராயம் - பெண்கள் பாதுகாப்பு - லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும்' என்பதைச் சட்டம் - ஒழுங்கு குறித்த இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தினேன்" என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.