கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர்வாசிகளுக்கு கட்டண விலக்கு: அமைச்சர் மூர்த்தி

உள்ளூர் வாசிகளுக்காக, கப்பலூர் சுங்கச் சாவடியில் பிரத்யேக வழி அமைக்க வழிவகை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலூர் சுங்கச்சாவடி
கப்பலூர் சுங்கச்சாவடிANI
1 min read

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர்வாசிகள் சுங்கக் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரை, திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் திருமங்கலம் நகராட்சிக்குள்பட்டு கப்பலூர் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்தச் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி அந்தப் பகுதியிலுள்ள பொதுமக்கள், வணிகர்கள் நீண்ட நாள்களாகப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கடந்த ஜூலை 10 முதல் உள்ளூர் வாகன ஓட்டிகள் 50 சதவீதம் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து, உள்ளூர் மக்களுக்கு சுங்கக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு கோரி திருமங்கலத்தில் வரும் 30 அன்று முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அமைச்சர் மூர்த்தி தலைமையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் சுங்கக் கட்டணத்திலிருந்து உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என அமைச்சர் மூர்த்தி உறுதியளித்தார். 7 கி.மீ. சுற்றுவட்டாரத்திலுள்ள உள்ளூர் வாசிகளுக்காக, கப்பலூர் சுங்கச் சாவடியில் பிரத்யேக வழி அமைக்க வழிவகை செய்யப்படும் என்றும் உரிய ஆவணங்கள் பரிசோதனையின் பிறகே மக்களுக்கு சுங்கச் சாவடியில் சுங்கக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in