
மதுரை திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று சொல்லும் துணிச்சல் திமுக அரசுக்கு வந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜகவின் மாநில, மாவட்ட மற்றும் மண்டல அளவிலான நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்றிரவு மதுரை வந்தடைந்தார். இன்று காலை 11 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து, மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள வேலம்மாள் மைதானத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.
இந்தக் கூட்டத்தில் அமித் ஷா உரையாற்றியதாவது:
"பெருமைக்குரிய தமிழ் மொழியில் உங்களிடம் பேச முடியவில்லை எனும் வருத்தத்தை உங்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன். நம் மதுரை மூன்றாயிரம் ஆண்டு வரலாற்றைக் கொண்டுள்ள மிக முக்கியமான புனிதமான இடம். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை வணங்குகிறேன். வரும் ஜூன் 22 அன்று முருகனுக்கான பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. அதையும் இம்மண்ணில் மிகச் சிறப்பாக நடத்தித் தர வேண்டும்.
இந்தக் கூட்டம் ஒரு மாற்றத்தை உருவாக்கும். திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து வீட்டுக்கு அனுப்பும். வரக்கூடிய 2026 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்று பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சியமைக்கும். நான் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் என் காதுகளும் சிந்தனைகளும் தமிழ்நாட்டின் மீது தான் உள்ளது.
அமித் ஷாவா திமுகவை தோற்கடிக்க முடியாது என்று நீங்கள் சொல்வது சரி. ஆனால், தமிழ்நாட்டு மக்கள் உங்களைத் தோற்கடிக்கக் காத்திருக்கிறார்கள். வரவிருக்கும் தேர்தலில் தமிழக மக்கள் திமுகவைத் தூக்கி எறியக் காத்திருக்கிறார்கள்.
வரக்கூடிய 2026 தேர்தல் பாஜகவின் ஒவ்வொரு தொண்டனுக்கும் மிகமிக முக்கியமான உயிர்ப்பான அவசியமான ஒரு களமாகும்.
2024-ல் ஒடிஷாவில் முழுப் பலத்துடன் முழுப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைந்தது. ஹரியாணாவிலும் இதேபோல மிகப் பெரிய வெற்றி 3-வது முறையாகப் பதிவு செய்யப்பட்டது. மஹாராஷ்டிரத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வெற்றியை பாஜக பதிவு செய்துள்ளது. 2025-ல் தில்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆட்சி அகற்றப்பட்டு 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சி அமைந்துள்ளது. 2025-ல் தில்லியில் எப்படி ஆட்சியமைத்தோமோ 2026-ல் தமிழ்நாட்டில் பாஜகவின் ஆட்சி அமையப்போகிறது.
திமுகவின் ஆட்சி மத்திய அரசிடமிருந்து மோடி அவர்கள் ஏழைகளுக்காகக் கொடுக்கும் பணத்தைக் கூட மக்களின் நலனுக்காக செலவிடாமல் அந்தப் பணத்தையெல்லாம் மடைமாற்றி அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நலன்களை எல்லாம் கிடைக்கவிடாமல் செய்கிறார்கள்.
தமிழக நூற்றுக்கு நூற சதவீதம் தோல்வியடைந்த அரசாகக் காட்சியளிக்கிறது. திமுக அரசு தேர்தல் நேரத்தில் மக்களுக்கு வாக்குறுதிப் பட்டியலைக் கொடுக்கிறார்கள். 10 சதவீதம்கூட நிறைவேற்றவில்லை. ஆனால், 90 சதவீதத்தை நிறைவேற்றியதாகக் கூறுகிறார்கள். இந்த ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மலிந்துகொண்டிருக்கிறது.
1,000 ஆண்டுகாலம் பழமைகொண்ட நம் திருப்பரங்குன்றம் முருகனின் அறுபடை வீடான அந்த மலையை சிக்கந்தர் மலை என்று சொல்லக்கூடிய துணிச்சல் இந்த திமுக அரசுக்கு வந்திருக்கிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக முருக பக்தர்கள் வழிபட்டு வந்த வழிபாட்டுத் தலத்தை இதுபோல அரசியல் லாபம் கருதி, பிரிவினைவாதம் கருதி இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
வரும் ஜூன் 22 அன்று முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. நீங்கள் ஒவ்வொருவரும் பெரும் திரளாகக் கலந்துகொண்டு நம் ஒற்றுமையையும் வலிமையையும் அந்த மாநாட்டில் காட்ட வேண்டும்.
தமிழ்நாட்டில் உயர்கல்வி பாடத்திட்டம் அனைத்தையும் தமிழில் இயற்ற வேண்டும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும் பல மடங்கு நிதி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியை எப்படி அகற்றப்போகிறோம், எப்போது அகற்றப்போகிறோம், என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனையில் தான் தொண்டர்கள் தொடர்ந்து இருக்க வேண்டும். 2026-ல் தமிழ்நாட்டில் பாஜக - அதிமுக ஆட்சி அமையும்" என்றார் அமித் ஷா.