திமுகவின் துரோகத்திற்கு பாடம் புகட்டப்படும்: ராமதாஸ்

திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி (எண். 181) அளிக்கப்பட்டிருந்தது.
திமுகவின் துரோகத்திற்கு பாடம் புகட்டப்படும்: ராமதாஸ்
1 min read

நிரந்தர பணி நியமனம் கோரி போராட்டம் நடத்திய பகுதி நேர ஆசிரியர்களை கைது செய்து துரோகம் இழைத்த திமுக அரசுக்கு, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் கடுமையான பாடம் புகட்டுவார்கள் என பதிவிட்டுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

பகுதி நேர ஆசிரியர்கள் தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் இன்று (டிச.10) ராமதாஸ் பதிவிட்டுள்ளவை பின்வருமாறு,

`தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தங்களுக்குப் பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முயன்ற 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்களை கைது செய்துள்ளது தமிழக அரசு.

பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடங்களை கற்றுத் தருவதற்காக 2012-ல் ரூ. 5 ஆயிரம் ஊதியத்தில் பணி அமர்த்தப்பட்ட அவர்கள் இன்றுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. கடந்த 12 ஆண்டுகளில் அவர்களுக்கு ரூ. 7,500 மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி (எண். 181) அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், இன்று வரை அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. கடந்த 4 ஆண்டுகளில் ஒரே ஒரு முறை மட்டுமே பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது.

பணி நிரந்தரம் வழங்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களை அழைத்து பேச்சு நடத்தியிருக்க வேண்டும். ஆனால், மாநில திட்ட இயக்குநர் நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தற்காலிக ஆசிரியர்கள் யாரும் கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர்கள் அல்ல. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள் என்பதால் பணிநிரந்தரம் பெறுவதற்கான அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு உண்டு.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த திமுக, அவர்களுக்கு அளிக்கப்பட்ட பணி நிரந்தரம், ஊதிய முரண்பாடு நீக்கம், பழைய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இந்த துரோகத்திற்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கடுமையான பாடம் புகட்டுவார்கள்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in