
தமிழ்நாட்டின் பொறியாளர்களும், தொழில்முனைவோர்களும் ஹிந்தி கற்றுக்கொள்வதே புத்திசாலித்தனம் என்று கருத்து தெரிவித்துள்ளார் ஸோஹோ தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு.
தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை, ஹிந்தி எதிர்ப்பு ஆகியவற்றை முன்வைத்து தமிழக அரசியல் களம் கடந்த ஓரிரு வாரங்களாக இயங்கி வருகிறது. இந்நிலையில், தன் எக்ஸ் பக்கத்தில் ஹிந்து கற்றுக்கொள்வது தொடர்பாக ஸ்ரீதர் வேம்பு கூறியதாவது,
`இந்தியாவில் மிக வேகமாக ஸோஹோ வளர்ந்து வரும் வேளையில், மும்பை மற்றும் டெல்லியைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுடன் கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த எங்கள் பொறியாளர்கள் நெருங்கிப் பணியாற்றுகிறார்கள். எங்கள் வணிகத்தின் பெரும்பகுதி இந்த நகரங்கள் மற்றும் குஜராத்தைச் சார்ந்து இயங்குகிறது.
தமிழ்நாட்டின் கிராமப்புற வேலைவாய்ப்புகள், அந்த வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் சிறப்பாகச் சேவை செய்வதைச் சார்ந்து இருக்கிறது. ஹிந்தி தெரியாமல் இருப்பது, தமிழ்நாட்டைச் சேர்ந்த நமக்கு மிகப்பெரிய குறையாகும். நாம் ஹிந்தி கற்றுக்கொள்வது புத்திசாலித்தனமான நகர்வாகும்.
கடந்த 5 வருடங்களில் நேரம் கிடைத்தபோதெல்லாம் ஹிந்தி வாசிக்கக் கற்றுக்கொண்டேன். இப்போது ஒருவர் ஹிந்தியில் பேசினால், அதில் 20% வரை என்னால் புரிந்து கொள்ளமுடியும்.
வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா இருப்பதால், தமிழ்நாட்டில் உள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் ஹிந்தி மொழியை கற்றுக்கொள்வதே புத்திசாலித்தனமாகும். அரசியலைத் தவிர்த்து, நாம் மொழியைக் கற்றுக்கொள்வோம். ஹிந்தி கற்றுக்கொள்வோம்’ என்றார்.