அதிமுகவிலிருந்து 4 பேர் நீக்கப்பட்டது, நீக்கப்பட்டதுதான் எனவும் கட்சியில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை முகப்பேரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது
"எடப்பாடி பழனிசாமிக்கு 6 பேர் எதிர்ப்பு, 12 பேர் எதிர்ப்பு, 18 பேர் எதிர்ப்பு என்கிறார்கள். ஆனால், ஒருவர்கூட எதிர்ப்பு இல்லை. எங்களுடையக் கட்சி கட்டுக்கோப்புடன் இருக்கிறது. இல்லை என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா?
அதிமுக இணையும், அதிமுக நாளை இணையும், அதிமுக டிசம்பரில் இணையும் என்கிறார்கள். அதிமுக எங்கு இணைகிறது? அதிமுக தெளிவாக உள்ளது. அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி 4 பேர் பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டது, நீக்கப்பட்டதுதான். இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.
அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் இன்று அடியோடு அழிந்துபோயிருக்கிறார்கள். இது தொண்டர்களால் நிர்வகிக்கப்படுகிற கட்சி. தொண்டர்களின் உழைப்பால் உயர்ந்த கட்சி. தொண்டர்கள்தான் அதிமுக. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுதான் இறுதியான முடிவு.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் நிச்சயமாக வலுவான கூட்டணி அமையும்" என்றார் எடப்பாடி பழனிசாமி.