தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ, அதைக் கொடுக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக சென்னை பெருங்கோட்டம் நிர்வாகிகள் சார்பில் சென்னையில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.
இதில் உரையாற்றிய அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக அண்ணாமலை பற்றி சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அருகதையும் இல்லை என்று பேசினார். அண்ணாமலையின் இந்த விமர்சனம் அரசியலில் பெரும் பேசுபொருளானது.
இந்த நிலையில்தான் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அண்ணாமலையின் பேச்சு குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டது.
"இன்னொரு தலைவரின் சொற்பொழிவுக்கு நான் பதில் சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். பேசுவதில் ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி இருக்கும். அண்ணாமலை பேசிய மேடையில் நான் இருந்தேன். முன்னாடி சொன்னதைப்போல ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி இருக்கிறது. எனவே, இதை அண்ணாமலையிடம் கேட்டால் சரியாக இருக்கும்.
என்னைப் பொறுத்தவரை நான் பேசியது தொடர்பாக வேண்டுமானால் விளக்கமளிக்கலாம். அவர் பாஜக மாநிலத் தலைவர். எனவே, அவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால் சரி. ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி இருப்பதால், இதை அவருடையப் பாணியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுக்க வேண்டும். மாநிலத் தலைவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றால், எதிர்க்கட்சித் தலைவருக்கு என்ன மரியாதையைக் கொடுக்க வேண்டுமோ அதை மாநிலத் தலைவருக்குக் கொடுக்க வேண்டும். மாநிலத் தலைவருக்கு மரியாதை கொடுக்கிறேன் என்றால், இது அவருடையப் பாணி என்று கடந்துவிடுவேன். மற்ற தலைவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றால், வார்த்தைகள் சற்று கடுமையாக இருக்க வேண்டாம் என்பது எனது கோரிக்கையாக இருக்கும்" என்றார்.
கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது தொடர்புடைய கேள்விக்குப் பதிலளித்ததாவது:
"மாநிலத் தலைவருக்குக் கருத்து சொல்ல உரிமை இருக்கிறது. முடிவு எடுப்பதற்கும் உரிமை உள்ளது. விவாதங்களுக்கு உட்படுத்தப்படலாம். பலரின் கருத்துகள் கேட்கப்படலாம். இதனால், ஒரு மேடையில் மட்டும் அது முடிவு செய்யப்படுவது என்பது எனது அரசியல் அனுபவத்தில் சரியா என்பது எனது கேள்வி. ஆனால், இதை வைத்து எனக்கும் அண்ணாமலைக்கும் இடையே சர்ச்சையைக் கிளப்பிடவிடக் கூடாது.
எனது அனுபவம் வேறு, அவருடைய அனுபவம் வேறு. நானும் இதே கட்சியில் ஐந்தரை வருடம் மாநிலத் தலைவராக இருந்தவள் தான். அவருடையக் கருத்துகளை அழுத்தமாகச் சொல்கிறார். ஆனால், கட்சி ரீதியாக மற்ற தலைவர்களின் கருத்து, நிர்வாகத்தின் கருத்து பின்பு கேட்கப்படும். இதில் அனைவரும் ஒரு முடிவுக்கு வரலாம்.
இன்று அவர் ஒரு கருத்தைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். மாநிலத் தலைவர் ஒரு கருத்தைக் கூறினால், அன்றையக் காலப்பொழுதில் அதை ஏற்றுக்கொள்வதுதான் ஒவ்வொரு கட்சியின் காரியகர்த்தாவின் முடிவாக இருக்க முடியும். நான் ஒரு சாதாரண காரியகர்த்தாதான். இப்போது அவருடையக் கருத்துக்கு மறுத்து பேச முடியாது. வரும் காலத்தில் பல விவாதங்கள் வரலாம்" என்றார் தமிழிசை சௌந்தரராஜன்.