
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன், உடல் நலக்கோளாரால் இன்று (டிச.14) காலை சென்னையில் காலமானார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளிட்ட இரங்கல் செய்திக்குறிப்பு பின்வருமாறு,
`முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ.வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்காக மிகுந்த வருத்தமடைந்தேன். அவர் ஒரு நேர்மையான, தைரியம் மிக்க தலைவர். காங்கிரஸ் கட்சி மற்றும் தந்தை பெரியாரின் முற்போக்குக் கொள்கைகளுக்காக தன் வாழ்க்கையை அவர் அர்ப்பணித்தார். அவரது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்’ என்றார்.
தெலங்கானா முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்ட இரங்கல்குறிப்பு பின்வருமாறு,
`உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்றார்.
பாமக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட இரங்கல் செய்திக்குறிப்பு பின்வருமாறு,
`தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத பங்களிப்பு செய்த தலைவர்களின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் ஒருவர். மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நான் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த போது பல்வேறு துறைகளின் இணை அமைச்சராக பணியாற்றியவர் இளங்கோவன். என் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர்.
அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கும், அவரது குடும்பத்திற்கும் பேரிழப்பாகும். ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், காங்கிரஸ் கட்சினர் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.