தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாளை ஒட்டி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது சிலைக்கு மரியாதை செய்தனர்.
சென்னை அண்ணாசாலை தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அருகே உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார். அவருடன் தமிழக அமைச்சர்கள், திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகே அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
தந்தை பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்,
`சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர்; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர்;
மக்களை பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர்; சமூக சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரடீஸ் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில் அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண் கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூக நீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்’ என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.