விக்கிரவாண்டி வி.சாலையில் வரும் அக்.27-ல் நடைபெறும் தவெகவின் முதல் மாநில மாநாடு குறித்து தொண்டர்களுக்கு இரண்டாவது முறையாக இன்று (அக்.20) கடிதம் எழுதியுள்ளார் தவெக தலைவர் விஜய்.
தொண்டர்களுக்கான கடிதத்தில் விஜய் எழுதியுள்ளவை பின்வருமாறு:
`அரசியல் களத்தில், வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று. நம்மை பொருத்தவரை, செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி.
மாநாட்டுக் களப்பணிகளில் மட்டுமல்லாமல் நம் ஒட்டுமொத்த அரசியல் களப்பணிகளிலும் நாம் அரசியல்மயப்படுத்தப்பட்டவர்கள் என்ற ஆழமான எண்ணத்தை மக்கள் மத்தியில் நீங்கள் உண்டாக்குவீர்க என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த நெகிழ்வான நேரத்தில், முக்கியமான ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன்.
கர்ப்பிணிப் பெண்கள், பள்ளிச் சிறுவர் சிறுமியர், நீண்ட காலமாக உடல்நலமின்றி இருப்பவர்கள், முதியவர்கள் பலரும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து நம் மாநாட்டுக்கு வரத் திட்டமிட்டு இருப்பர். அவர்களை மாநாட்டில் காண வேண்டும் என்ற ஆவல் எனக்கு உள்ளது. ஆனால் எல்லாவற்றையும்விட அவர்களின் நலனே எனக்கு மிக மிக முக்கியம்.
மாநாட்டுக்காக அவர்கள் மேற்கொள்ளும் நீண்ட பயணம் அவர்களுக்கு உடல்ரீதியான சிரமத்தை ஏற்படுத்தக்கூடும். அதனால் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வர வேண்டாம் என்று அவர்களின் குடும்ப உறவாக இருக்கும் உரிமையில் அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
பயண வழிகளில் அரசியல் ஒழுங்கையும் நெறிமுறைகளையும் போக்குவரத்து விதிமுறைகளையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். நாம் எதைச் செய்தாலும், அதீத பொறுப்புணர்வுடன் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டையும் காப்போம் என்பதை உணர்த்துமாறு செயல்பட்டால் தான் நம் செயல்கள் மிக நேர்த்தியாக அமையும்.
அரசியலுக்கும் அது பொருந்தும். நாம் எப்போதும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவே இருக்க வேண்டும். எந்நாளும் இதை ஒரு கட்டுபாட்டு விதியாகவே கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வி.சாலை என்றும் விவேக சாலையில் சந்திப்போம். வெற்றி நிச்சயம்’ என்றார்.