எருமை மாடு முட்டிய சம்பவம்: தீவிர சிகிச்சைப் பிரிவில் பெண் அனுமதி

நடப்பாண்டில் மட்டும் சாலைகளில் சுற்றித் திரிந்த 1,117 மாடுகளை சென்னை மாநகராட்சி பிடித்துள்ளது.
எருமை மாடு முட்டிய சம்பவம்: தீவிர சிகிச்சைப் பிரிவில் பெண் அனுமதி
படம்: https://x.com/chennaicorp
1 min read

சென்னை திருவொற்றியூரில் எருமை மாடு முட்டியதில் காயமடைந்த பெண், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் நாய் மற்றும் மாடுகளால் அவ்வப்போது குழந்தைகளுக்கும், மக்களுக்கும் சிரமம் ஏற்படுவது வழக்கமாகியுள்ளது. சென்னை திருவொற்றியூரில் பெண் ஒருவரை எருமை மாடு ஒன்று நேற்று முட்டி இழுத்துச் சென்ற காணொளி இன்று அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.

எருமை மாடு முட்டியதில், மாட்டின் கொம்பில் பெண்ணின் ஆடை சிக்கிக் கொண்டது. இதனால், அவர் எருமை மாட்டால் இழுத்துச் செல்லப்பட்டார். இதில், அந்தப் பெண்ணுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவர் தற்போது தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி எக்ஸ் தளப் பக்கத்தில் விளக்கமளித்துள்ளதாவது:

"திருவொற்றியூர் சோமசுந்தரம் நகர் 2-வது தெருவில் பெண் ஒருவரை எருமை மாடு ஒன்று நேற்று காயப்படுத்தியுள்ளது. இந்த மாட்டைப் பிடித்து பெரம்பூரில் கண்காணிப்பில் உள்ளது. இந்த எருமை மாட்டுக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. இந்த ஆண்டு மட்டும் பொதுப் பாதுகாப்பு உறுதி செய்வதற்காக சாலைகளில் சுற்றித் திரிந்த 1,117 மாடுகளை சென்னை மாநகராட்சி பிடித்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிபட்டால் அபராதம் விதிக்கப்படுவது ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. முதல்முறையாக மாடு பிடிபட்டால், ரூ. 5 ஆயிரமும், இரண்டாவது முறையாக மாடு பிடிபட்டால் ரூ. 10 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படும். மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை பிடிபட்டால், மாட்டின் உரிமையாளரிடம் மாடு ஒப்படைக்கப்படாது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in