
சுங்குவார்சத்திரம் சாம்சங் தொழிற்சாலை நிர்வாகத்தைக் கண்டித்து, தொழிற்சாலை வளாகத்திற்குள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் சங்கத் தலைவர் அறிவித்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்து உள்ள சுங்குவார்சத்திரத்தில் அமைந்துள்ள சாம்சங் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து தொழிலாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் சாம்சங் தொழிற்சாலை நிர்வாகத்துடன் தமிழக அமைச்சர்கள் நடத்திய முத்தரப்புப் பேச்சுவர்த்தையில், சுமூக உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டுவிட்டுத் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினார்கள்.
இந்நிலையில், போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் தொழிற்சாலை நிர்வாகம் இறங்கியுள்ளதாக தொழிலாளர்கள் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
குறிப்பாக, போராட்டத்தைக் கைவிட்டுவிட்டுப் பணிக்குத் திரும்பிய தொழிலாளர்களுக்கு, போராட்டத்திற்கு முன்பு பார்த்துவந்த பணிகளை வழங்கவில்லை எனவும், 35-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு நிர்வாக தரப்பிலிருந்து எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் தொழிலாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதனால், தொழிலாளர்களை துன்புறுத்தும் தொழிற்சாலை நிர்வாகத்தைக் கண்டித்து நாளை (டிச.17) காலை உணவைப் புறக்கணித்து, அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சாம்சங் இந்தியா பணியாளர்கள் சங்க தலைவர் முத்துக்குமார் தகவல் தெரிவித்தார்.