
மறைந்த பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல. கணேசனின் உடல் முழு அரசு மரியாதையுடன் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் இன்று (ஆக. 16) மாலை தகனம் செய்யப்பட்டது.
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த இல. கணேசன் கடந்த பிப்ரவரி 2023 முதல் நாகாலாந்து மாநில ஆளுநராக பணியாற்றி வந்தார். அண்மையில் சென்னைக்கு வந்த கணேசன் நீரிழிவு நோயால் பாதத்தில் ஏற்பட்ட புண்ணுக்கு சிகிச்சை பெற்று தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆக. 8-ம் தேதி எதிர்பாராவிதமாக கால் இடறி கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படிருந்த இல. கணேசனுக்கு பல்துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் நாளுக்கு நாள் மோசமடைந்துள்ளது. இந்நிலையில், நேற்று (ஆக. 15) மாலை 6.23 மணியளவில் அவர் காலமானார்.
இதைத் தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக இல. கணேசனின் உடல் அவரது தியாகராய நகர் இல்லத்தில் வைக்கப்பட்டது. தமிழக ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், இன்று (ஆக. 16) மாலை பெசன்ட் நகர் மின் மயானத்தில் வைத்து இல. கணேசனின் உடலுக்கு 3 முறை 42 குண்டுகள் முழுங்க முப்படை வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தினார்கள். அதன்பிறகு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.