தமிழிசை குறித்து அவதூறுப் பேச்சு: சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது குஷ்பு புகார்

“தொடர்ச்சியாக பெண்களை மிகவும் புண்படுத்தும் வகையில் அவதூறாகப் பேசி வருகிறார்”.
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது குஷ்பு புகார்
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது குஷ்பு புகார்@khushsundar

தெலங்கானா மற்றும் புதுச்சேரியின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குறித்து அவதூறாகப் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு தொடரப்போவதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

திமுகவைச் சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடந்த ஆண்டு நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு குறித்தும் அவதூறாகப் பேசியிருந்தார். இவரது பேச்சுக்குக் கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதானார்.

இதைத் தொடர்ந்து திமுக அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். இதன் பிறகு ஜாமீனில் வெளியே வந்த அவர், தான் பேசியதற்கு மன்னிப்புக் கேட்டதைத் தொடர்ந்து மீண்டும் திமுகவில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், சமீபத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தமிழிசை சௌந்தரராஜன் குறித்து அவதூறாகப் பேசிய காணொளி இணையத்தில் பரவியது. இதைத் தொடர்ந்து அவரின் பேச்சுக்கு குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியதாவது:

“தொடர்ச்சியாக பெண்களை மிகவும் புண்படுத்தும் வகையில் அவதூறாக பேசி வருகிறார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இவர் மீது வழக்குப்பதிவு செய்ய போகிறேன். திரும்பவும் கட்சியில் இணைப்பதற்காக மட்டுமே முதல்வர் ஸ்டாலின் அவரை தற்காலிகமாக நீக்கினார். பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை அவர் அவசியம் கற்பிக்க வேண்டும். பாஜகவின் மிகவும் மதிப்புமிக்க உறுப்பினராக தமிழிசை திகழ்கிறார்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in