
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் 1000 ஆண்களுக்கு 1010 பெண்கள் எனப் பாலின விகிதத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் பாலின விகிதம் கடந்த சில ஆண்டுகளாக உயர்ந்து வருகிறது. சென்ற ஆண்டு கணக்குப்படி 1000 ஆண் குழந்தைகளுக்கு 948 பெண் குழந்தைகள் பிறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்துகொண்டு கருக்கலைப்பு, பெண் சிசு கொலையில் ஈடுபடுவது போன்ற சட்டவிரோத செயல்களால் இந்த விகிதத்தில் வேறுபாடுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இதனை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்ட கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறையுடன் இணைந்து பல புதிய உத்திகளை அமல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரியில் ஒவ்வொரு 1000 ஆண் குழந்தைக்கும் 1010 பெண் குழந்தைகள் பிறந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்ததாவது - கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 61 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 270 துணை சுகாதார மையங்களும் உள்ளன. இவற்றில் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள், கிராமப்புறச் சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் தொடர் கண்காணிப்பு அமைக்கப்பட்டது. மாவட்ட சுகாதாரத் துறை மருத்துவமனைகள் மற்றும் தனியார் ஸ்கேன் மையங்களில் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டது. பெண் சிசுக்கொலைகள் மற்றும் சட்டவிரோத கருக்கலைப்புகளைத் தடுக்கும் வகையில், பாலின நிர்ணயம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இது, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது தடுக்கப்பட்டது. மாவட்டம் முழுவதிலும் உள்ள ஸ்கேன் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. பாலின நிர்ணயத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பதிவுசெய்யப்பட்ட சில மருத்துவர்கள், போதிய ஆதாரங்கள் இல்லாததால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலமே பாலின விகிதத்தில் முன்னேற்றம் கொண்டு வந்தது சாத்தியமாகியுள்ளது” என்று கூறினார்.
Krishnagiri | Sex Ratio | Tamilnadu Sex Ratio | HUD | Krishnagiri HUD